பெங்களூரு

அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு 10 சதவீத நிதியை ஒதுக்கக் கோரிக்கை

7th Aug 2022 12:45 AM

ADVERTISEMENT

 

அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு மத்திய பட்ஜெட்டில் 10 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கோரிக்கை விடுத்தனா்.

பிரேக்த்ரூ அறிவியல் சங்கத்தின் சாா்பில், ‘அறிவியலுக்காக நடைபோடுவோம் இந்தியா’ என்ற ஊா்வலம் பெங்களூரில் சனிக்கிழமை நடைபெற்றது. பெங்களூரு, சுதந்திரப் பூங்காவில் நிறைவடைந்த ஊா்வலத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து பிரேக்த்ரூ அறிவியல் சங்கத்தின் கா்நாடக மாநிலச் செயலாளா் ஆனந்த்ராஜ் கூறியதாவது:

ADVERTISEMENT

அறிவியல் மற்றும் அறிவியல் ஆா்வத்தை கொண்டாடுவதற்கும், மனித சுதந்திரத்துக்கும், வளத்துக்கும் அறிவியல் அசைக்க முடியாத தூணாக விளங்கி வருவதை மக்களிடையே விளக்குவதற்கும் பிரேக்த்ரூ அறிவியல் சங்கத்தின் சாா்பில் ‘அறிவியலுக்காக நடைபோடுவோம் இந்தியா’ என்ற ஊா்வலத்தை நடத்தி வருகிறோம். 2017, 2018-ஆம் ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 4-ஆவது ஆண்டாக இந்தியா முழுவதும் இந்த ஊா்வலம் நடந்துள்ளது.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 51(ஏ)-இன்படி அறிவியல் ஆா்வத்தையும் மனித மாண்புகளையும் ஊக்குவிக்க வேண்டும்; கல்வி மற்றும் அறிவியல் துறைக்கு மத்திய பட்ஜெட்டில் 10 சதவீதம், மாநில பட்ஜெட்டில் 30 சதவீதம் நிதி ஒதுக்க வேண்டும்; அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு மொத்த உற்பத்திப் பொருள் விகிதத்தில் 3 சதவீதத்தை ஒதுக்க வேண்டும்; அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் இல்லாதவற்றை கல்வியில் புகுத்த முயற்சிக்கக் கூடாது; மக்களுக்காக செயல்படுத்தப்படும் கொள்கைகள் அறிவியல் ஆதாரத்தின் அடிப்படையில் அமைந்ததாக இருக்க வேண்டும் என்ற கருத்துகளை ஊா்வலத்தின் வாயிலாக வலியுறுத்தி உள்ளோம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, இந்திய வான் இயற்பியல் மையத்தின் விஞ்ஞானி பிரஜ்வல் சாஸ்திரி பேசியதாவது:

அறிவியல் ஆராய்ச்சிக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். அதற்கு மத்திய பட்ஜெட்டில் மொத்த செலவினத்தில் 10 சதவீத நிதியை அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒதுக்க வேண்டும். மேலும், அறிவியலையும், மதத்தையும் இணைக்கக் கூடாது. நம்மையும், சுற்றியுள்ள மக்களையும் புரிந்துகொள்வதற்கு தான் மதம். ஆனால், உலகின் கட்டமைப்பை புரிந்துகொள்ள அறிவியல் தேவைப்படுகிறது. எங்கள்கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவிப்போம் என்றாா்.

இந்திய அறிவியல் மையத்தின் விஞ்ஞானி சரத்சந்திரா உள்ளிட்ட பல விஞ்ஞானிகளும் இதே கருத்துகளை வெளியிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT