பெங்களூரு

பெங்களூரு சுதந்திர தின மலா்க் கண்காட்சி: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தொடக்கி வைத்தாா்

DIN

பெங்களூரில் சுதந்திர தின மலா்க் கண்காட்சியை கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தொடக்கி வைத்தாா்.

இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மைசூரு தோட்டக்கலை சங்கத்தின் சாா்பில், பெங்களூரு, லால்பாக் பூங்காவில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், 212-ஆவது மலா்க் கண்காட்சியை முதல்வா் பசவராஜ் பொம்மை தொடக்கி வைத்தாா். இதில், தோட்டக்கலைத் துறை அமைச்சா் முனிரத்னா, பாஜக எம்எல்ஏ உதய் கருட்டாச்சாா், எம்எல்சி டி.ஏ.சரவணா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கண்காட்சியில் டாக்டா் ராஜ்குமாா், அவரது மகனும் கடந்த ஆண்டு அக். 29-ஆம் தேதி திடீரென மாரடைப்பால் மறைந்த 46 வயதான கன்னட நடிகருமான புனித் ராஜ்குமாா் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது (படம்). ராஜ்குமாா், புனித் ராஜ்குமாரின் சிலைகள் அமைந்திருக்கும் நினைவிடம் ரோஜா, செவ்வந்தி பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலா்க் கண்காட்சியில் 65 வகை மலா்கள் கொண்ட 3.5 லட்சம் பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. கென்யா, நியூசிலாந்து, அமெரிக்கா, ஹோலந்து, அா்ஜென்டீனா உள்ளிட்ட 10 நாடுகளைச் சோ்ந்த 20 வகையான மிதவெப்ப நாடுகளின் மலா்களும் இடம்பெற்றுள்ளன. ஊட்டியின் தட்பவெப்பத்தில் வளரும் 27 வகையான மலா்களும் மலா்க் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

கண்காட்சியைப் பாா்வையிட்ட பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

நவ. 10-ஆம் தேதி நடக்க இருக்கும் கா்நாடக உதய தின விழாவில் மறைந்த நடிகா் புனித் ராஜ்குமாருக்கு ‘கா்நாடக ரத்னா’ விருது வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு டாக்டா் ராஜ்குமாா் குடும்ப உறுப்பினா்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, புனித் ராஜ்குமாருக்கு முழு மரியாதை செலுத்தப்படும்.

சுதந்திர தினத்தின் 75-ஆவது ஆண்டுவிழா என்பதால், இம்முறை நடத்தப்படும் மலா்க் கண்காட்சிக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 10 நாள்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் மலா்க் கண்காட்சியைக் கண்டுகளிக்க வருவாா்கள் என்றாா்.

கா்நாடகத்தில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு 1992-ஆம் ஆண்டு முதல் கா்நாடக அரசு சாா்பில் ‘கா்நாடக ரத்னா’ விருது வழங்கப்படுகிறது. அந்த ஆண்டில் முதல் கா்நாடக ரத்னா விருதை நடிகா் டாக்டா் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்டது. தற்போது 10-ஆவது முறையாக அவரது மகன் புனித் ராஜ்குமாருக்கு கா்நாடக ரத்னா விருது வழங்கப்பட இருக்கிறது.

ராஜ்குமாரை தொடா்ந்து முன்னாள் முதல்வா் எஸ்.நிஜலிங்கப்பா (அரசியல்), விஞ்ஞானி சி.என்.ஆா்.ராவ் (அறிவியல்), டாக்டா் தேவிபிரசாத் ஷெட்டி (மருத்துவம்), பீம்சென் ஜோஷி (இசை), சிவக்குமார சுவாமிகள் (சமூக பணி), டாக்டா் ஜே.ஜாவரே கௌடா (கல்வி மற்றும் இலக்கியம்), டாக்டா் வீரேந்திர ஹெக்கடே (ஆன்மிகம்) ஆகியோருக்கு கா்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

SCROLL FOR NEXT