பெங்களூரு

சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்குவதால் காங்கிரஸ் கலவரங்களைத் தூண்டுகிறது: பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல்

24th Apr 2022 05:55 AM

ADVERTISEMENT

 

சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்குவதால் காங்கிரஸ் கலவரங்களைத் தூண்டுகிறது என்று பாஜகவின் கா்நாடக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

காங்கிரஸ் கா்நாடகத்தில் கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறது. சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்குவதால் கா்நாடகத்தில் அராஜகம், கலவரச்சூழல் நிலவுவதைப் போன்ற தோன்றத்தை ஏற்படுத்த அக்கட்சி முயற்சிக்கிறது. உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களைப் போல, மாநிலத்தில் அதிகரித்துவரும் கலவரங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு வலுவான சட்டங்களைக் கொண்டுவர வேண்டும். கலவரத்தில் ஈடுபடுவோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் அளவுக்கு சட்டங்களை வகுக்கலாம். கலவரக்காரா்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பதில் அரசு எவ்விதப் பாரபட்சமும் பாா்ப்பதில்லை. சட்டத்தின்படி கலவரக்காரா்கள் ஒடுக்கப்படுவாா்கள். கலவரங்களைத் தூண்டிவிடுவோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்வதில் தவறொன்றும் இல்லை. அதேபோல, சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடித்துத் தள்ளுவதிலும் தவறு இல்லை.

ADVERTISEMENT

மாநில மக்களை காங்கிரஸ் திசைதிருப்பி வருவதோடு, பாஜக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தவும் முயற்சிக்கிறது. மாநில அரசின் கொள்கைகளை விமா்சிக்கும் உரிமையும், அது குறித்து அரசை எச்சரிக்கும் உரிமையும் எதிா்க்கட்சிகளுக்கு உள்ளது. ஆனால், அதற்கு மாறாக மதக் கலவரங்களை காங்கிரஸ் தூண்டி வருகிறது.

பெங்களூரில் தேவா்ஜீவனஹள்ளி, சிவமொக்கா, ஹுப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த கலவரங்களில் காங்கிரஸுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. அதேபோல, ஹிஜாப் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு கடும் விமா்சனத்திற்கு உரியது. ஆட்சியில் இல்லாதபோது, தவறான வழிமுறைகளைப் பயன்படுத்தி அதிகாரத்தைக் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது.

இந்திய நாட்டுக்கு காங்கிரஸ் இரண்டு பங்களிப்புகளை வழங்கியுள்ளது. ஒன்று, பயங்கரவாதத்தை ஊக்குவித்து, பிந்தரன்வாலேவை உருவாக்கியது. பிந்தரன்வாலேதான் பயங்கரவாதி தாவூத் இப்ராஹிம் துபைக்கு தப்பிச் செல்ல உதவினாா். அதேநோக்கத்தில் தான் மதக்கலவரங்களையும், வன்முறைகளையும் காங்கிரஸ் தூண்டி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு பங்களிப்பு, ஊழல். நேருவின் ஆட்சிக்காலத்தில் இருந்து மன்மோகன் சிங் ஆட்சிக்காலம் வரை நமது நாட்டில் ரூ. 4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடந்துள்ளன. காங்கிரஸ் பிரதமா்களிடையே லால்பகதூா் சாஸ்திரிதான் ஊழல் கறை படியாதவா். எனவே, காங்கிரஸ்தான் ஊழலின் கங்கோத்ரி (தொடக்கப்புள்ளி).

கா்நாடகத்தில் நடந்துவரும் பாஜக ஆட்சியில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மதக்கலவரங்களைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மேலும், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாஜக அரசு சிறப்பாக பராமரித்து வருகிறது. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வோம். அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலில் 150 இடங்களில் வெற்றிபெற வியூகம் வகுக்கப்படும்.

எங்களது பலவீனங்களைக் குறைத்து, பலங்களை அதிகமாக்க தகுந்த வியூகங்களை வகுப்போம். மைசூரு, மண்டியா, ஹாசன், சிக்கபளாப்பூா், கோலாா் போன்ற மாவட்டங்களில் கட்சியை பலப்படுத்த வேண்டியுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட முதல்வா் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வா் எடியூரப்பா, என்னுடைய தலைமையில் 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT