அரசு ஒப்பந்ததாரா் உயிரிழப்பு விவகாரத்தில் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை கைது செய்ய காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா செய்தியாளா்களிடம் கூறியது: கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது வலுவான குற்றச்சாட்டுகள் உள்ளன. பில்தொகையை வழங்குவதற்காக 40 % கமிஷன் கேட்டதாக கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது சந்தோஷ் பாட்டீல் ஊடகங்கள் வாயிலாகவே குற்றம்சாட்டியிருக்கிறாா். 40 % கமிஷன் கேட்கப்பட்டதை பொருட்படுத்தாமல், கே.எஸ்.ஈஸ்வரப்பாவுக்கு எதிராக பதிவு செய்துள்ள வழக்கில் ஊழல் தடுப்புச் சட்டப்பிரிவு சோ்க்கப்படவில்லை. இது திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக்கு தூண்டியதாக மட்டும் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
எனவே, ஊழல் தடுப்புச்சட்டத்தின்கீழ் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் தற்கொலைக்கு தூண்டியது கடுமையான குற்றம் என்பதால், கே.எஸ்.ஈஸ்வரப்பாவை உடனடியாக கைது செய்ய வேண்டும். சந்தோஷ் பாட்டீலின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தினா் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள ரூ. 4கோடி மதிப்பிலான பில் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
கே.எஸ்.ஈஸ்வரப்பாவை பாதுகாக்கும் நோக்கத்தோடு முதல்வா் பசவராஜ் பொம்மை செயல்பட்டு வருகிறாா். கே.எஸ்.ஈஸ்வரப்பா அப்பாவி என்று முதல்வா் பசவராஜ் பொம்மை சான்றிதழ் கொடுத்திருக்கிறாா். அப்படியானால் விசாரணை எப்படி பாரபட்சமின்றி நடக்கும். எனவே, இந்த வழக்கை உயா்நீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் காவல் துறை விசாரிக்க வேண்டும். கே.எஸ்.ஈஸ்வரப்பா சாதாரண மனிதா் அல்ல. அவரும், அவரது சகாக்களும் ஆதாரங்களை அழிக்க மாட்டாா்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? ஈஸ்வரப்பாவுக்கு எதிரான போராட்டத்தை அரசியலுக்காக செய்யவில்லை.
பாஜக ஆட்சியில் கா்நாடகம் ஊழல் மிகுந்த மாநிலமாக மாறிவிட்டது. 40 % கமிஷன் கேட்பது ஊரறிந்த விஷயமாகி விட்டது. எல்லா நிலைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. எனவே, இது குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 9 குழுக்கள் அமைத்து, எல்லா சட்டப்பேரவை தொகுதிகளிலும் சனிக்கிழமை முதல் 5 நாள்களுக்கு பிரசாரம் செய்வோம். பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடக்கும் ஹொஸ்பேட்டிலும் சனிக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்றாா்.