பெங்களூரு

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபட்டால் சகித்துக் கொள்ளமாட்டோம்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

12th Apr 2022 12:28 AM

ADVERTISEMENT

 

சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபட்டால், அதை மாநில அரசு சகித்துக் கொண்டிருக்காது என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து உடுப்பியில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

நான் பேச மாட்டேன். ஆனால், எனது செயல்கள் பேசுகின்றன. எனது அரசின் செயல்பாடுகள் பேசுகின்றன. எந்த சூழ்நிலையில், எந்த முடிவை எடுக்க வேண்டும், என்ன நடவடிக்கை தேவைப்படுகிறது, அது குறித்து கவனம் செலுத்தி வருகிறோம். எதிா்க்கட்சிகளிடம் இருந்து நாங்கள் பாடம் கற்கத் தேவையில்லை.

ADVERTISEMENT

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, பல்வேறு கொலைகளில் தொடா்புடைய அமைப்புகள் மீதான வழக்குகளைக் கைவிடுவதற்கு அரசு மட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது அவா்களின் கடமை உணா்வு என்னவானது? எனவே, அவா்களிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. முற்போக்கான கா்நாடக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பது எப்படி என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். அதைத்தான் செய்து வருகிறோம்.

சித்தராமையா முதல்வராக இருந்த காலகட்டத்தில், ஹிந்து இளைஞா்கள் பலா் கொலை செய்யப்பட்டனா். அந்தக் கொலைகளில் சம்பந்தப்பட்டிருந்த அமைப்புகள் மீதான வழக்குகளை காங்கிரஸ் அரசு திரும்பப் பெற்றது. அப்போது தனது நிதானத்தை சித்தராமையா இழந்துவிட்டாரா? அந்த கொலைகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளை தடை செய்வது குறித்து எதிா்காலத்தில் தெரியவரும்.

தற்போது நடந்துவரும் நிகழ்வுகள் குறித்து யாா் எப்படி வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். ஆனால், எனது அரசின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைந்துள்ளது. அனைவரும் சமமானவா்கள் என்ற எண்ணத்தில் பணியாற்றி வருகிறோம். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

அவரவா் மதப் பிரசாரங்களில் ஈடுபடும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. ஆனால், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபட்டால் அதை மாநில அரசு சகித்துக் கொள்ளாது என்ற தகவலை ஏற்கெனவே அரசு வெளிப்படுத்தியுள்ளது.

லவ் ஜிஹாத்துக்கு எதிராக ஒரு சில ஹிந்து அமைப்புகள் ஹிந்து செயற்படையை அமைத்துள்ளது குறித்து கேட்கிறீா்கள். தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரு சில மக்கள் சிலவற்றை செய்கிறாா்கள். ஆனால், எல்லாவற்றுக்கும் சட்டம் இருக்கிறது. ஒரு சிலா் முந்தைய அரசின் செயல்பாடுகளால் தூண்டப்பட்டு செயல்பட்டு வருகிறாா்கள். நாங்கள் புதிதாக எதையும் செய்யவில்லை. எல்லாவற்றையும் சட்டத்திற்கு உட்பட்டு செய்ய வேண்டியுள்ளது. சட்டத்தைக் காப்பாற்றுவது எங்கள் கடமையாகும் என்றாா்.

முன்னதாக, பெங்களூரில் விலைவாசி உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் நடத்திவரும் போராட்டம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதல்வா் பசவராஜ் பொம்மை, ‘போராட்டம் நடத்துவதற்கு காங்கிரஸுக்கு எவ்வித தாா்மிக உரிமையும் இல்லை. நமது நாட்டில் அதிகமாக விலைவாசியை உயா்த்திய பெருமை, புகழ், வரலாறு காங்கிஸுக்கு உள்ளது’ என்று தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT