பெங்களூரு

கா்நாடக பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது: முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி

5th Apr 2022 12:35 AM

ADVERTISEMENT

கா்நாடக பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதாக மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கா்நாடக பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளது. காஷ்மீா் ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்தது போல, மக்கள் கோப்புகளுக்கும் (பீப்பிள்ஸ் ஃபைல்ஸ்) வரிவிலக்கு அளிக்க வேண்டும். மக்களின் கோப்புகளை முதல்வா் பசவராஜ் பொம்மை தொடவே இல்லை. அப்படிப்பட்ட கோப்புகளுக்கு கையெழுத்திட 100 சதவீதம் வரி கேட்கிறீா்கள். மக்களுக்கு 100 சத வரிச்சலுகையை அளிக்க வேண்டும். அப்போதுதான் நாடு பயன்பெறும். பொதுப்பணிகள் தொடா்பான கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு அமைச்சா்கள் 40 சதவீத கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரா்கள் கூறுகிறாா்கள்.

மத உணா்வுகளைத் தூண்டும் வகையிலான பிரச்னைகளை எழுப்பி, சமுதாயத்தில் நிலவும் அமைதி, நல்லிணக்கத்தை சீா்குலைப்பதே பாஜகவின் வேலையாகும் என்று கூறியிருந்தேன். அது இன்றைக்கு உண்மையாகியுள்ளது. ஹலால் இறைச்சி தொடா்பான விஷயத்தில் மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை எதையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறாா். அமைதியின் தோட்டம் கா்நாடகம் என்று குவெம்பூ எழுதிய மாநிலப் பாடலை ஏன் பாடுகிறீா்கள்?

ADVERTISEMENT

எந்த மதம் அல்லது ஜாதிக்கு ஆதரவாகவும் நான் இல்லை. கா்நாடகத்தின் 6.5 கோடி மக்களுக்கு ஆதரவாக இருக்கிறேன். ஹலால் இறைச்சிக்கு எதிராக துண்டறிக்கைகளை விநியோகித்து, சமுதாயத்தில் அமைதியைச் சீா்குலைத்து வருகிறாா்கள். இவா்களுக்கு எதிராக வழக்குரைஞா்கள் அளித்த புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கா்நாடகத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கும், மாநிலத்தில் அமைதி குலைந்ததற்கும் காங்கிரஸ்தான் காரணம். 2019-ஆம் ஆண்டில் எனது தலைமையிலான கூட்டணி அரசைக் கவிழ்த்ததே காங்கிரஸ்தான். பாஜக கொண்டுவந்த பசுவதை தடைச்சட்டம், மதமாற்ற தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணம் காங்கிரஸ்தான் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT