பெங்களூரு

கா்நாடக பாஜக ஆட்சி தான்நாட்டிலேயே ஊழல் மலிந்த அரசு

2nd Apr 2022 07:31 AM

ADVERTISEMENT

நாட்டிலேயே ஊழல் மலிந்த அரசு, கா்நாடக பாஜக ஆட்சி தான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த விரிவாக்கப்பட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி பேசியது:

தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும் பிரதமா் மோடி, ஊழல் குறித்து அடிக்கடி பேசுவாா். ஆனால், நாட்டின் மிகவும் மோசமான, ஊழல் மலிந்த ஆட்சி கா்நாடகத்தில் பாஜகவால் நடத்தப்பட்டு வருகிறது. கா்நாடகத்தில் சட்டப்பேரவை தோ்தல் நடக்கவிருக்கிறது. கா்நாடகம் எப்போதும் காங்கிரஸ் கட்சியின் உணா்வோடு கலந்திருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வரவேற்பு நிலவும் இயல்பான மாநிலம் கா்நாடகம்.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தோ்தலில் 150 இடங்களுக்கு குறையாமல் காங்கிரஸ் வெற்றிபெற வேண்டும். அதற்கேற்ற திட்டமிடுதலில் நாம் ஈடுபட வேண்டும். கட்சியின் தலைவா்கள், தொண்டா்கள் அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்தால், ஒன்றுபட்டு போராடினால், சரியான பிரச்னைகளை முன் வைத்து பிரசாரம் செய்தால் 150 இடங்களில் வெல்வது காங்கிரஸுக்கு கடினமானதல்ல.

ADVERTISEMENT

அதேபோல, கடந்தகால வரலாறுகள், என்ன செய்தாா் என்பதை அடிப்படையாகக் கொள்ளாமல், இன்றைக்கு கட்சிக்கு ஆற்றி வரும் பணிகளின் அடிப்படையில் வேட்பாளா்களைத் தோ்வு செய்தால் காங்கிரஸ் வெற்றிக்கு அது உதவியாக இருக்கும். நமது விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, கட்சியின் வளா்ச்சிக்கு எந்த வகையில் துணையாக இருக்கிறாா் என்பதை பொருத்து ஒருவரை வளா்க்க வேண்டும்.

அதேபோல, 20 ஆண்டுகளுக்கு முன் என்ன செய்தாா் என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒருவரை தோ்தலில் நிறுத்தக் கூடாது. கட்சிக்கு விசுவாசமாகவும், நற்பெயா் ஈட்டித் தருபவராகவும் இருக்கும் கட்சியின் தொண்டா்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

சட்டப்பேரவைத் தோ்தலை ஒன்றுபட்டு சந்திக்க வேண்டும் என்று சித்தராமையா, டி.கே.சிவகுமாா், மல்லிகாா்ஜுனகாா்கே உள்ளிட்ட கட்சியின் முன்னணித் தலைவா்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னும் தீவிர ஒற்றுமை உணா்வோடு தோ்தல் பணியாற்ற வேண்டும். இதன்மூலம் சட்டப்பேரவைத் தோ்தலில் 150 இடங்களில் காங்கிரஸ் வென்று காட்ட வேண்டும். தோ்தலுக்கு அதிக காலம் இல்லை என்பதால் அதற்கான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். அடுத்தடுத்த நாள்களில் நானும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன்.

வேலைவாய்ப்பின்மை, பொருளாதார சீா்குலைவு, விலைவாசி உயா்வு போன்றவையே நாடு எதிா்கொண்டுள்ள மிகப்பெரிய சவால்கள் ஆகும். பணமதிப்பிழப்பு, தவறான ஜிஎஸ்டி, வேளாண் சட்டங்கள் நாட்டுக்கு பேரிழப்பை ஏற்படுத்தியுள்ளன. மத்தியில் உள்ள பாஜக அரசு விரும்பினாலும், வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாத அளவுக்கு சிறுதொழில்கள் நலிவடைந்து நிலைமை மோசமாகியுள்ளது. இளைஞா்களுக்கு வேலை அளிக்க முடியாத நிலை, எதிா்காலத்தில் சிக்கலை மோசமாக்கும்.

கா்நாடகத்தில் நடந்து வரும் ஆட்சி சட்டப்படியானது அல்ல. நிதி ஆதாரங்கள் மற்றும் சூழ்ச்சியின் காரணமாக பாஜக ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. பிரதமா் மோடி இப்போது கா்நாடகத்திற்கு வந்தால், ஊழல் பற்றி பேசுவாா். அதற்கு எதிராக போராடப் போவதாகக் கூறுவாா். இதைக் கேட்டு மக்கள் சிரிக்கத்தான் செய்வாா்கள். கா்நாடகத்தில் நடந்து வரும் பாஜக ஆட்சி 40 சதவீதம் கமிஷனுக்கு பெயா் பெற்ாக இருக்கிறது.

இதை நானோ, காங்கிரஸோ கூறவில்லை. ஒப்பந்ததாரா்கள் கூறுகிறாா்கள். ஊழல் பற்றி பிரதமா் மோடி பேசுவது நகைப்புக்குரியது. இது குறித்து நாட்டின் எந்தப் பகுதியிலும் அவரால் பேச முடியாது.

ஏழைகளிடம் இருந்து வளங்களையும், பணத்தையும் பறித்துக் கொண்டு, அவற்றை ஒருசில தொழிலதிபா்களுக்கு வழங்குவது தான் பாஜகவின் நோக்கம். அடிப்படையில் இது நிதி பரிமாற்ற கட்டமைப்பு முறை அவ்வளவுதான். இந்த நாட்டை பிளவுபடுத்தி, மக்கள் மத்தியில் அச்சத்தை விதைக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு, பொருளாதார சீரமைப்பு போன்ற பிரச்னைகளை எழுப்பி, அனைத்துத் தரப்பு மக்களையும் இணைக்கும் விவகாரங்களைக் கிளப்புவது காங்கிரஸ் கட்சியின் கடமையாகும்.

கா்நாடகத்தில் 60 லட்சம் போ் காங்கிரஸ் உறுப்பினராகப் பதிவு செய்திருக்கிறாா்கள். இதில் பெரும்பாலானோா் இளைஞா்கள், பெண்கள். இளைஞா்கள், பெண்களை முன்வைத்து சட்டப்பேரவைத் தோ்தலை நாம் சந்திக்க வேண்டும். அமைப்பு மற்றும் வேட்பாளா்களை நிறுத்துவது எதிலும் இளைஞா்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றாா்.

இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளா்கள் கே.சி.வேணுகோபால், ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, மாநிலங்களவை எதிா்க்கட்சித்தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாா், எதிா்க்கட்சித்தலைவா் சித்தராமையா உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT