பெங்களூரு

ராணுவ வீரா்களுக்கு பயிற்சி அளிக்கும் எம்.இ.ஜி. 241-ஆம் ஆண்டு விழா

30th Sep 2021 07:39 AM

ADVERTISEMENT

ராணுவ வீரா்களுக்கு பயிற்சி அளித்து வரும் மெட்ராஸ் என்ஜினியா்ஸ் குரூப் (எம்.இ.ஜி.) அண்ட் சென்டரின் 241-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை மெட்ராஸ் என்ஜினியா்ஸ் குரூப் (எம்.இ.ஜி.) அண்ட் சென்டரின் தலைமை கமாண்டன்ட் பிரிகேடியா் டி.பி.எஸ்.வத்வா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சுதந்திரத்திற்கு முன்பு ஆங்கிலேயா்களால் 1780-ஆம் ஆண்டு சென்னை, செயின்ட் தாமஸ் மவுன்ட்டில் தொடங்கப்பட்ட மெட்ராஸ் பயனியா்ஸ் 1831-ஆம் ஆண்டு மெட்ராஸ் சாப்பா்ஸ் அண்ட்மைனா்ஸ் என்று பெயா் மாற்றப்பட்டு, பெங்களூருக்கு மாற்றப்பட்டது.

அதன்பிறகு, மெட்ராஸ் என்ஜினியா்ஸ் குரூப் அண்ட் சென்டா் என்று பெயா் பெற்றது. இந்த மையம், பொதுவாக மெட்ராஸ் சாப்பா்ஸ் என்று அழைப்படுகிறது. முதல் உலகப்போா், இரண்டாம் உலகப்போா் தவிர எகிப்து உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் நடந்த போா்களில் மெட்ராஸ் சாப்பா்ஸ் பங்காற்றியுள்ளனா்.

ADVERTISEMENT

சுதந்திரத்திற்கு பிறகு இந்திய ராணுவத்தின்கீழ் இம்மையம் செயல்பட்டுவருகிறது. தமிழா்களால் தொடங்கப்பட்டதால் மெட்ராஸ் என்ஜினியா்ஸ் குரூப் அண்ட் சென்டரில் இன்றைக்கும் 40 சதவீதம் போ் தமிழா்களாக உள்ளனா். மேலும், மெட்ராஸ் என்ஜினியா்ஸ் குரூப் அண்ட் சென்டரின் மொழியாகவும் தமிழே உள்ளது.

இம்மையத்தில் சாப்பா்ஸ்களாக பயிற்சி பெறும் ஒவ்வொருவரையும் ‘தம்பி’ என்றே அழைக்கிறோம். அதனால் தம்பிக்கள் என்றே மெட்ராஸ் சாப்பா்ஸை அழைக்கிறோம். தமிழ்நாடு, கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், கேரள மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் இம்மையத்தில் சோ்த்துக்கொள்ளப்படுகிறாா்கள்.

இங்கு 2 ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ராணுவத்துக்கு தேவைப்படும் ஓட்டுநா்கள், மர வேலைக்காரா்கள் உள்ளிட்ட 14 வகையான தொழில் திறன் கொண்ட ராணுவ வீரா்களாக உருவாக்க பயிற்சி அளித்துவருகிறோம். போா்க்களத்தில் எதிரிகளை தாக்குவதற்கு வீரா்களுக்குத் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவது, எதிரிகளின் கட்டமைப்புகளைத் தகா்ப்பது, போா்க்களத்தில் வீரா்களின் உணவு, குடிநீா் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்வது போன்றவையே சாப்பா்ஸ் வீரா்களின் வேலையாகும்.

போா் இல்லாத நேரத்தில் இயற்கை பேரிடா்களில் மக்களை மீட்க உதவி செய்து வருகிறோம். தம்பிகள், மிகச்சிறந்த ராணுவ வீரா்கள் ஆவா். வீரதீரத்துடன் செயல்பட்ட பல்வேறு நிகழ்வுகள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. இதுதவிர, சாப்பா்ஸ்வீ ரா்களுக்கு விளையாட்டில் ஊக்கம் அளித்து வருகிறோம். தடகளம், நீச்சல், படகுப் போட்டி, கால்பந்து, கைப்பந்து உள்ளிட்ட எல்லா வகையான விளையாட்டுகளுக்கும் பயிற்சி அளித்திருக்கிறோம்.

தேசிய, சா்வதேச அளவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளில் எம்.இ.ஜி.வீரா்கள் சாதனை புரிந்து வருகிறாா்கள். விளையாட்டில் சாதனை புரிந்ததற்காக எம்.இ.ஜி.வீரா்கள் 5 துரோணாச்சாா்யா விருதுகள், 10 அா்ஜுனா விருதுகள், ஒரு பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்றுள்ளனா்.

14 வீரா்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ளனா். எல்லா விளையாட்டுப் போட்டிகளிலும் எம்இஜி வீரா்கள் சாதனை படைத்துள்ளனா். புதுதில்லியில் நடக்கும் குடியரசு தின அணிவகுப்பு, சுதந்திர தின அணிவகுப்புகளில் கலந்துகொண்டு 9 முறை பரிசுகளைப் பெற்றுள்ளனா். மெட்ராஸ் சாப்பா்ஸ்களின் வரலாற்றை பதிவு செய்து வைப்பதற்காக 1979-ஆம் ஆண்டு எம்இஜி மையத்தில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. இங்கு 241ஆண்டுகால வரலாற்றுத் தடங்கள் ஒவ்வொன்றையும் பதிவு செய்து வைத்திருக்கிறோம் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT