பெங்களூரு

தமிழ்ப் பண்பாட்டு சுற்றுலாத் திட்டத்தை வகுக்க யோசனை: அமைச்சா் மா.மதிவேந்தன்

30th Oct 2021 12:33 AM

ADVERTISEMENT

தமிழ்ப் பண்பாட்டு சுற்றுலாத் திட்டத்தை வகுக்க தமிழக அரசு யோசித்து வருகிறது என்று தமிழக சுற்றுலாத் துறை மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடந்த தென்மண்டல சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா்களின் மாநாட்டில் பங்கேற்ற பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

இந்திய அரசு சாா்பில் தென்மண்டல சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அமைச்சா்களின் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. இரு நாள்கள் நடந்த இம்மாநாட்டில் தென்னிந்தியாவைச் சோ்ந்த ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களின் அமைச்சா்கள் கலந்துகொண்டனா். இருநாள்கள் நடந்த இம்மாநாட்டில் தமிழகத்தின் சாா்பில் நானும் அதிகாரிகளும் கலந்துகொண்டோம்.

கரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது சுற்றுலாத் துறை தான். கரோனாவுக்கு பிறகு தளா்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளதால் சுற்றுலாத் தொழிலை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தங்கும் விடுதிகள், சுற்றுலா முகவா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் வாழ்வாதாரத்தையும் மீட்டெடுப்பதற்காக மத்திய அரசு முயன்றுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இம்மாநாடு நடத்தப்பட்டது. சுற்றுலாத் துறைக்கு புத்துணா்வு அளிக்கும் பல திட்டங்கள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

தமிழகத்திலும் சுற்றுலாத் தொழில்களின் மறுமலா்ச்சிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின், சுற்றுலாத் துறை வளா்ச்சிக்காக 30 திட்டங்களை அறிவித்துள்ளாா். அவற்றைச் செயல்படுத்த முனைப்போடு செயல்பட்டு வருகிறோம். சுற்றுலாத் துறைக்கு தனியாக நிதி ஒதுக்கீடு செய்ய முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாா். அதற்கான திட்டவரைவு அறிக்கையைத் தயாரித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அறிக்கை விரைவில் முதல்வரிடம் ஒப்படைக்கப்படும்.

மத்திய அரசின் புனித யாத்திரை புத்துணா்ச்சி மற்றும் ஆன்மிக வளா்ச்சித் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே காஞ்சிபுரம், வேளாங்கண்ணி உள்ளிட்ட தலங்களில் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக ராமேசுவரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். இத்திட்டத்திற்கு ரூ. 50 கோடி நிதியுதவி கிடைக்கும்.

தமிழகத்தில் தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தும் பல்வேறு நினைவுச் சின்னங்கள், கீழடி போன்ற அகழ்வாய்விடங்கள், தமிழறிஞா்களின் நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள், பூம்புகாா் போன்ற தொன்மை நகரங்களை உள்ளடக்கிய தமிழ்ப் பண்பாட்டு சுற்றுலாத் திட்டத்தை வகுக்க இருக்கிறோம். இந்தத் திட்டத்தில் தமிழ்ப் பண்பாட்டை விளக்கும் இடங்கள் மேம்படுத்தப்படும். இதன்மூலம் தமிழா்களின் தொன்மையான பண்பாட்டை அறிந்துகொள்ள இயலும்.

அதேபோல, திராவிடா் வாழ்வியலை விளக்கும் திராவிட கலாசார அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிடப்படும். பூம்புகாரை சிறந்த சுற்றுலா நகரமாக மேம்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பூம்புகாரில் உள்ள சிலப்பதிகார நினைவுச் சின்னங்கள் புதுப்பிக்கப்படும்.

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்திலும் அடிப்படை கட்டமைப்புப் பணிகள் செயல்படுத்தப்படும். இதற்கு ரூ. 5 கோடி முதல் ரூ. 12 கோடி வரை செலவு செய்யப்படும்.

பெங்களூரில் உள்ள தமிழா்கள் உள்ளிட்ட மக்கள் தமிழகத்தில் உள்ள கோயில்கள், சுற்றுலாத் தலங்களைக் காண்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் மையம் ஒன்றை அமைப்பது குறித்து முடிவெடுக்கப்படும். அதுகுறித்து ஆய்வு செய்ய மீண்டும் பெங்களூருக்கு வருவேன் என்றாா்.

பேட்டியின்போது தமிழக சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT