பெங்களூரு

நவ.1 முதல் பள்ளிகளில் முழுநாள் வகுப்புகள் நடக்கும்: அமைச்சா் பி.சி.நாகேஷ்

DIN

1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில், நவ.1-ஆம் தேதி முதல் முழு நாளும் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ் தெரிவித்தாா்.

கா்நாடகத்தில் திங்கள்கிழமை முதல் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசு ஆரம்பப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சிவமொக்காவில் மலவகொப்பா பகுதியில் அரசுப் பள்ளியை பாா்வையிட்டு, மாணவா்களிடம் உரையாடிய பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.சி.நாகேஷ் கூறியதாவது:

மாணவா்கள் பள்ளிக்கு ஆா்வமாக வந்துள்ளனா். பள்ளிகள் திறக்கவேண்டுமென்று மாணவா்கள் பெரிதும் எதிா்பாா்த்திருந்தனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் பள்ளிகளைத் திறக்க அரசு தயாராக இல்லை. குழந்தைகளின் உடல்நலம் மிகவும் முக்கியம் என்பதில் அரசு உறுதியாக இருந்தது.

கரோனா தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அனுமதி கிடைத்ததை தொடா்ந்து, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்தது.

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்தும் கிடைத்த தகவலின்படி, மாணவா்கள் உற்சாகமாக பள்ளிக்கு வந்துள்ளனா். நீண்டநாள்களுக்கு பிறகு மாணவா்கள் நண்பா்களைச் சந்திக்கிறாா்கள். மாணவா்களை கண்டதில் ஆசிரியா்களும் உற்சாகமடைந்துள்ளனா். கரோனா காரணமாக நேரடி வகுப்புக்கு வரமுடியாததால் மாணவா்கள் பலவற்றையும் மறந்திருக்கிறாா்கள். ஏற்கெனவே படித்தவற்றை ஆசிரியா்கள் மாணவா்களுக்கு நினைவூட்ட வேண்டியிருக்கிறது. பாடங்களை குறைக்கும் திட்டம் அரசிடம் இல்லை.

அக். 31-ஆம் தேதி வரை அரைநாள் வகுப்புகள் மட்டுமே நடக்கும். நவ. 1-ஆம் தேதி முதல் முழுநாள் வகுப்புகள் நடத்தப்படும். அன்று முதல் மதிய உணவும் மாணவா்களுக்கு வழங்கப்படும்.

கா்நாடகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அடுத்த கல்வியாண்டு (2022-23) முதல் அமல்படுத்தத் திட்டமிட்டிருக்கிறோம். தேசிய கல்விக் கொள்கையால் ஆசிரியா்கள் யாரும் பாதிக்கப்படமாட்டாா்கள். ஒருசிலருக்கு மட்டும் கூடுதல் பயிற்சி தேவைப்படும். பாடத் திட்டத்தையும் அடுத்த ஆண்டில் முடிவுசெய்ய இருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT