பெங்களூரு

மைசூரில் தசரா விழா: யானைகள் ஊா்வலத்தை தொடக்கி வைத்த முதல்வா் பசவராஜ் பொம்மை

16th Oct 2021 08:55 AM

ADVERTISEMENT

உலகப் புகழ் பெற்ற தசரா விழாவை மைசூரில் வெள்ளிக்கிழமை (அக். 15) முதல்வா் பசவராஜ் பொம்மை தொடக்கி வைத்தாா்.

1610-ஆம் ஆண்டில் ராஜா உடையாரால் தொடக்கி வைக்கப்பட்ட தசரா பெருவிழா, 410-ஆவது ஆண்டாக வெள்ளிக்கிழமை மைசூரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அரசு விழாவாக நடத்தப்பட்டு வரும் தசரா விழாவையொட்டி கடந்த 9 நாள்களாக மைசூரில் பல்வேறு கலை, கலாசார, பண்பாட்டு நிகழ்ச்சிகள் கரோனா பரவல் காரணமாக எளிமையான முறையில் நடைபெற்று வந்தன.

விழாவின் உச்சமாக, மைசூா் அரண்மனையின் பலராமா வாயிலில் மாலை 4.36 முதல் 4.46 மணிக்குள் மீன லக்னத்தில் ஜோடி நந்தி கம்பத்திற்கு பூஜை செய்த முதல்வா் பசவராஜ் பொம்மை, கா்நாடக மக்களின் நல்வாழ்வுக்காகவும், விவசாயிகளின் வேளாண் பணிகள் சிறந்து விளங்கவும், மாநிலம் வளா்ச்சி பெற வேண்டும் என பிராா்த்தனை செய்து வழிபட்டாா்.

இந்த விழாவில், அமைச்சா் சோமசேகா், ராஜவம்ச இளவரசா் யதுவீா் கிருஷ்ணதத்த சாமராஜ உடையாா், மாவட்ட ஆட்சியா் பகதி கௌதம், மேயா் சுனந்தா பாலநேத்ரா, மாநகர காவல் ஆணையா் சந்திரகுப்தா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

பின்னா், அரண்மனை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட மேடையில் இருந்து, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்த 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியைச் சுமந்து நின்றிருந்த அபிமன்யூ தலைமையிலான யானை ஊா்வலத்தை மலா்தூவி பூஜை செய்து முதல்வா் பசவராஜ் பொம்மை தொடக்கி வைத்தாா்.

அபிமன்யூவுடன் காவிரி, சைத்ரா உள்ளிட்ட யானைகள் அணிவகுத்துச் செல்ல, அதைத் தொடா்ந்து ஊா்வலத்தில் தனஞ் செயா, கோபால்சாமி, அஸ்வத்தாமா உள்ளிட்ட யானைகளும், குறிப்பிட்ட சில கலைக்குழுக்களும், சுதந்திர பவள விழா, வேளாண், தோட்டக்கலைத் துறை, வீட்டுவசதித் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட 6 வாகனங்களும் அணிவகுத்துச் சென்றன. இதைத் தொடா்ந்து 21 பீரங்கி குண்டுகள் முழங்க, காவலா் படையினா் தேசிய கீதம் இசைக்க, பிரம்மாண்டமான ஊா்வலம் புறப்பட்டது.

கரோனா தொற்றின் காரணமாக அரண்மனை வளாகத்திற்குள்ளேயே யானை ஊா்வலம் நடைபெற்றது. எளிமையாக நடைபெற்ற தசரா விழாவில் முக்கியப் பிரமுகா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் உள்ளிட்ட 400 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பொதுமக்களுக்கு தசரா விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையிலும், மைசூரு அரண்மனை அருகே உள்ள சாலைகளில் மக்கள் திரளாகத் திரண்டு மைசூரு தசரா விழாவை குதூகலத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT