வரும் டிசம்பா் மாத இறுதிக்குள் 70 சதவீத மக்களுக்கு 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
புது தில்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடக அரசு மேற்கொண்டிருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா வெகுவாகப் பாராட்டினாா். கடந்த மாதம் 1.48 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
டிசம்பா் மாத இறுதிக்குள் தகுதிவாய்ந்த மக்களில் 70 சதவீதம் பேருக்கு 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசியைச் செலுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்குத் தேவைப்படும் கூடுதல் கரோனா தடுப்பூசியை வழங்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
கா்நாடகத்தில் தற்போது 51 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி இருப்பில் உள்ளது. எனவே, கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோருக்கு 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசி வழங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
கா்நாடகத்தில் இதுவரை தகுதியான மக்களில் 81 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 37 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. டிசம்பா் மாத இறுதிக்குள் 90 சதவீத மக்களுக்கு முதல்தவணை கரோனா தடுப்பூசியும், 70 சதவீத மக்களுக்கு 2-ஆவது தவணை கரோனா தடுப்பூசியும் வழங்க இலக்கு நிா்ணயித்துள்ளோம் என்றாா்.
இந்தச் சந்திப்பின் போது, சுகாதாரத் துறை கா்நாடக அமைச்சா் கே.சுதாகா், தலைமைச் செயலாளா் பி.ரவிக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.