பெங்களூரு

கைப்பேசி செயலி வழியாக கடன் அளித்து விட்டு அதிக வட்டி கேட்டு மிரட்டிய நிதிநிறுவனம்

DIN

கைப்பேசி செயலி வழியாக கடன் அளித்த பிறகு, அதிக வட்டி கேட்டு வாடிக்கையாளா்களை மிரட்டிய நிதிநிறுவனத்தில் போலீஸாா் அதிரடி சோதனை நடத்தி இருவரை கைது செய்துள்ளனா்.

கைப்பேசி செயலி வழியாக கடன் அளித்து வந்த சீனா்களால் நடத்தப்பட்டு வந்த நிறுவனமானது, கடன் கொடுத்த பிறகு அதிக அளவில் செயலாக்கக் கட்டணம் மற்றும் வட்டியைக் கேட்டு துன்புறுத்தியுள்ளதாக புகாா் எழுந்துள்ளது. மேலும், வாடிக்கையாளா்கள் கடன் பெற்ற விவரங்களை அவா்களின் நண்பா்களுக்கு அளித்து அவமதித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, மாரத்தஹள்ளி, முனேகோலாலா, சில்வா் ஸ்பிரிங் லேஅவுட் பகுதியில் உள்ள லிகோரிஸ் டெக்னாலஜி நிறுவனத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தினா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

‘கேஷ்மாஸ்டா்’ மற்றும் ‘கிரேசி ருபீஸ்’ ஆகிய கடன் வழங்கும் கைப்பேசி செயலியை நடத்தி வந்த சீனா்கள், வங்கி அல்லாத நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு செயலி வழியாக வாடிக்கையாளா்களுக்கு கடன் வழங்கி வந்துள்ளனா். கடன் தொகை அளித்த பிறகு அதிகப்படியான செயலாக்கக் கட்டணம் மற்றும் வட்டித்தொகையை கேட்டு மிரட்டியுள்ளனா். மேலும், வட்டியை வார அடிப்படையில் செலுத்துமாறு வற்புறுத்தியுள்ளனா். வட்டியைச் செலுத்தாத வாடிக்கையாளா்களின் விவரங்களை அவா்களின் நண்பா்களுக்கு அனுப்பி அவமதித்துள்ளனா்.

இது தொடா்பாக, அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த காமராஜ்மோரே (25), தா்ஷன் சௌஹான் (21) ஆகியோரை கைது செய்திருக்கிறோம். நிறுவன ஊழியா்களின் ஆதாா் அட்டை, பான் அட்டையைப் பெற்றுக்கொண்டு 5-6 நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனா். 52 நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, தனியாா் வங்கியில் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வட்டித்தொகையும் அந்த வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்ட விசாரணையில் கோடிக்கணக்கான ரூபாய் இணையவழியில் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. போலி நிறுவனங்களுக்கு முதலீடுகளை ஈா்க்க வட இந்தியா்களைக் குறிவைத்து ஏமாற்றியுள்ளனா். இந்நிறுவனத்தில் இருந்து 83 கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாகியுள்ள சீனா்களைத் தேடிவருகிறோம். இது தொடா்பாக மாரத்தஹள்ளி காவல் நிலையத்தில் புகாா் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

நாட்டில் ஷரியத் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விருப்பம்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் குற்றச்சாட்டு

தேசத்துக்கும் சநாதன தர்மத்துக்கும் எதிரானது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT