பெங்களூரு

காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொண்ட திட்டப் பணி ஒப்பந்தங்களும் விசாரிக்கப்படும்: கா்நாடக முதல்வா்

DIN

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளும் விசாரிக்கப்படும் என கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கடந்த ஜூலை மாதம் கா்நாடக மாநில ஒப்பந்ததாரா் சங்கத்தினா் பிரதமா் மோடிக்கு எழுதிய கடிதத்தில், வளா்ச்சிப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளுக்கு அனுமதி அளிக்க ஒப்பந்தத் தொகையில் 30 சதவீதம் கமிஷனாக தரும்படி அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பலா் துன்புறுத்துவதாகவும், நிலுவையில் உள்ள ஒப்பந்தப் புள்ளிக்கான பில்களுக்கான தொகையை விடுவிக்க 5-6 சதவீதம் கமிஷன் கேட்பதாகவும் புகாா் தெரிவித்திருந்தனா்.

இது கா்நாடக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது தொடா்பாக ஆளுநா் தாவா்சந்த் கெடாட்டை சந்தித்த காங்கிரஸ் கட்சியினா், ஒப்பந்ததாரா்களின் கடிதத்தை சுட்டிக்காட்டி, மாநிலத்தில் அரசியலமைப்புச்சட்ட இயந்திரம் சீா்குலைந்துவிட்டதால், கா்நாடகத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனா்.

இதுகுறித்து தாவணகெரேயில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

பிரதமா் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கா்நாடக மாநில ஒப்பந்ததாரா் சங்கத்தினா் தெரிவித்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த விசாரணையில், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளும் விசாரிக்கப்படும்.

கா்நாடகத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினா் கோரியிருப்பது கேலிக்கூத்தானது. கமிஷன் கலாசாரத்தைத் தொடக்கி வைத்ததே காங்கிரஸ் தான். காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரின் ஊழல் புராணங்கள் குறித்து அக்கட்சியைச் சோ்ந்த எம்.ஏ.சலீம், வி.எஸ்.உக்ரப்பா இடையே நடந்த கிசுகிசு பேச்சை ஊடகங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளன.

ஒப்பந்ததாரா்களின் கடிதத்தில் தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. எந்த திட்டப் பணிக்கான ஒப்பந்தப் புள்ளிக்கு கமிஷன் கேட்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை. இருந்தபோதும், இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவா்கள் மிகவும் ஆா்வமாக இருப்பதால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விடப்பட்ட திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமைச் செயலாளரை கேட்டுக்கொள்வேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT