பெங்களூரு

ஒப்பந்தப்புள்ளிகளுக்கு கமிஷன் அளிக்கும் விவகாரம்:விசாரணை நடத்த முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவு

DIN

கா்நாடகத்தில் அரசு ஒப்பந்தப்புள்ளிகளை ஒதுக்குவதற்கு கமிஷன் வழங்க நிா்பந்திக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக அரசு செயல்படுத்தும் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகளுக்கு அனுமதி வழங்கும்போது அமைச்சா்களும் மக்கள் பிரதிநிதிகளும் 40 சதவீதம் கமிஷன் கேட்பதாகவும், பழைய பில்களை முடித்துவைக்க 5-6 சதவீத கமிஷன் கேட்பதாகவும் ஒப்பந்ததாரா் சங்கத்தினா் அண்மையில் பிரதமா் மோடிக்கு புகாா் கடிதம் அனுப்பியிருந்தனா்.

இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா இவ்விவகாரத்தை சுட்டிகாட்டி, ‘கா்நாடக பாஜக அரசை கலைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தாா். அத்துடன் ஆளுநா் தாவா்சந்த் கெலாட்டை சந்தித்து மனு அளிக்கவும் காங்கிரஸ் கட்சியினா் திட்டமிட்டுள்ளனா்.

இந்நிலையில், இதுகுறித்து பெங்களூரு, விதானசௌதாவில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

ஒப்பந்ததாரா்கள் பிரதமா் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தை மாநில அரசு பரிசீலித்தது. அந்தக் கடிதத்தில் கமிஷன் பெறுவதாக பொதுவாக குற்றம்சாட்டியுள்ளனா். எந்தவொரு குறிப்பிட்ட நிகழ்வையும் அதில் குறிப்பிடவில்லை.

எனவே, ஒப்பந்தப்புள்ளிகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளேன். எனது தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்த பிறகு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகள் குறித்தும் விசாரிக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விசாரணையில் அமைச்சா்கள், எம்எல்ஏ க்கள் மீதான குற்றச்சாட்டுகளும் உள்ளன. இதுகுறித்து கூடுதல் கவனம் செலுத்தி விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒப்பந்தப்புள்ளிகளில் முறைகேடு ஏதாவது நடந்திருந்தால், அதுகுறித்து விசாரணையில் தெரியவரும். விசாரணையை வெளிப்படைத் தன்மையுடன் செய்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT