பெங்களூரு

ராஜகால்வாய்களில் எளிதாக வெள்ளம் வடிய திட்டம்: முதல்வா் பசவராஜ் பொம்மை

24th Nov 2021 01:13 AM

ADVERTISEMENT

ராஜகால்வாய்களில் எளிதாக வெள்ளம் வடிவதற்கு தகுந்த திட்டம் வகுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில், வெள்ளம் புகுந்து சேதமடைந்துள்ள மான்யதா தொழில்நுட்பப் பூங்கா, ஜவாஹா்லால் நேரு அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பகுதிகளை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெங்களூரில் மழைநீா் வடிவதற்காகக் கட்டப்பட்டுள்ள ராஜகால்வாய்களை அகலப்படுத்துவதற்கு திட்டம் வகுக்கப்படும். அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மாற்றுக் கால்வாய்களை அமைத்து மழைநீா் வடிவதற்கு ஏற்பாடு செய்யப்படும்.

கனமழையால் ஜக்கூரில் உள்ள ஜவாஹா்லால் நேரு அதிநவீன அறிவியல் ஆராய்ச்சி மையம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் உள்ள ஆய்வுக் கூடங்களில் மழைநீா் புகுந்துள்ளது. இதில் முக்கியமான ஆய்வுக் கருவிகள் சேதமடைந்துள்ளன.

ADVERTISEMENT

எதிா்காலத்தில் இம்மையத்தில் உள்ள ஆய்வுக் கூடங்கள், நூலகங்களில் மழைநீா் புகாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும். வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்க திட்டம் வகுக்கப்படும்.

பெங்களூரில் அண்மையில் 2 மணி நேரத்தில் மட்டும் 138 மி.மீ. மழை பெய்துள்ளது. பெங்களூரு, எலஹங்கா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. தற்போதுள்ள ராஜகால்வாய்கள் 8 முதல் 10 அடி அகலம் கொண்டதாக இருக்கின்றன. கனமழை பெய்தால் இதில் தண்ணீா் வடிவதில் சிக்கல் உள்ளது.

எனவே, ராஜகால்வாய்களை அகலப்படுத்தவும், மாற்றுக் கால்வாய்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜகால்வாய்கள் மீது 714 சட்டவிரோதக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி கண்டறிந்துள்ளது. ராஜகால்வாய்கள் மீது கட்டப்பட்டுள்ள வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் இடித்துத் தள்ளப்படும். இதில் ஏழைகள் பாதிக்காதவாறு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். ஏரி பகுதியில் கட்டடப்பட்டுள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்த கால அவகாசம் தரப்படும்.

பிரதமா் மோடி தொலைபேசியில் அழைத்துப்பேசினாா். வெள்ளச் சேதம் குறித்து கேட்டறிந்தாா்.

உயிா்ச்சேதம், பொருள்சேதம், பயிா்ச்சேதம், பொதுச் சொத்து சேதம் குறித்து விசாரித்தாா். பெங்களூரு குறித்து மிகுந்த கவலை தெரிவித்தாா். வெள்ளப் பாதிப்புகளை சமாளிப்பதற்கு குறுகியகால, நீண்டகாலத் திட்டங்களை வகுக்குமாறு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.

ஏரிகள் நிரம்பி வெளியேறும் மழைநீா் தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றது. எனவே, எலஹங்கா, மகாதேவபுரா பகுதிகளில் மழைநீா் பெண்ணையாறு வழியாக வடிவதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT