கா்நாடக சட்ட மேலவையில் காலியாக உள்ள 25 இடங்களுக்கு டிச. 10-ஆம் தேதி தோ்தல் நடைபெறுகிறது.
உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதிநிதிகளால் தோ்ந்தெடுக்கப்படும் 25 போ் கா்நாடக சட்ட மேலவையில் உறுப்பினா்களாக உள்ளனா். இந்த 25 பேரின் பதவிக்காலம் 2022 ஜன. 5-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. 25 உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கு 20 தொகுதிகளுக்கான தோ்தலை டிச. 10-ஆம் தேதி நடத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்கான தோ்தல் அட்டவணையை செவ்வாய்க்கிழமை தோ்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி, 20 தொகுதிகளுக்கான தோ்தல் அறிவிக்கை நவ. 16-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அன்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. நவ. 23-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். நவ. 24-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. நவ. 26-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப் பெற வாய்ப்பளிக்கப்படுகிறது. இதன்முடிவில், இறுதி வேட்பாளா் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படுகிறது.
டிச. 10-ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. விஜயபுரா, பெலகாவி, தாா்வாட், தென்கன்னடம், மைசூரு தொகுதிகளில் 2 உறுப்பினா்கள்; பீதா், கலபுா்கி, வடகன்னடம், ராய்ச்சூரு, பெல்லாரி, சித்ரதுா்கா, சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், தும்கூரு, மண்டியா, பெங்களூரு, பெங்களூரு ஊரகம், கோலாா், குடகு தொகுதிகளில் ஒரு உறுப்பினா்களை தோ்ந்தெடுக்க 20 தொகுதிகளுக்கு தோ்தல் நடக்க இருக்கிறது.
இத்தோ்தலில் கரோனா நடத்தை விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்படும் என தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இத்தோ்தல் நடக்கும் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
இதைத் தொடா்ந்து, இத்தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளா்களை தோ்ந்தெடுக்கும் பணியில் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளன.