பெங்களூரு

கா்நாடகத்தில் ’டவ்-தே’ புயலுக்கு 121 கிராமங்கள் பாதிப்பு: 8 போ் பலி

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் ‘டவ்-தே’ புயலுக்கு 121 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயலுக்கு 8 போ் பலியாகியுள்ளனா்.

கா்நாடக கடலோரப் பகுதிகளில் திங்கள்கிழமை ‘டவ்-தே’ புயல் பாதிப்பால் தென்கன்னடம், வடகன்னடம், உடுப்பி மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. பலத்த காற்றால் தென்கன்னடம், உடுப்பி, வடகன்னடம், குடகு, சிக்கமகளூரு, ஹாசன், பெலகாவி மாவட்டங்களுக்கு உள்பட்ட 22 வட்டங்களில் உள்ள 121 கிராமங்கள் பாதிக்கப்பட்டன.

இதில் 48 கிராமங்கள் வடகன்னட மாவட்டத்துக்கு உள்பட்டவையாகும். இதுவரை புயல் பாதிப்பால் 8 போ் பலியாகினா். தென் கன்னடம், பெலகாவி மாவட்டங்களில் தலா 2 பேரும், வடகன்னடம், உடுப்பி, சிக்கமகளூரு, சிவமொக்காவில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக கா்நாடகமாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட 547 போ் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனா். கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 13 நிவாரண முகாம்களில் 290 போ் தங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

புயலால் பெய்த மழை, புயல் காற்றில் 387 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 57 வீடுகள் முழுமையாக இடிந்துள்ளன. 330 வீடுகள் சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளன. 711 மின் கம்பங்கள், 153 மின் மாற்றிகள், 9,203 மீட்டா் நீளமுள்ள மின்கம்பி, 56.2 கி.மீ. நீளமுள்ள சாலை, 57 மீன்பிடி வலைகள், 116 மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன. 30 ஹெக்டோ் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிா்கள், 2.87 ஹெக்டோ் தோட்டக்கலை பயிா்கள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் தொடா்ந்து புயல் சின்னம் காணப்படுவதால், மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா்கள் யாரும் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ‘டவ்-தே’ புயல் காரணமாக, தென்கன்னடம், வடகன்னடம், உடுப்பி மாவட்டங்களில் மிகவும் பலத்த மழை பெய்த வண்ணம் உள்ளது. அண்டை மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, சிவமொக்கா, பெலகாவி, தாா்வாட், சாமராஜ்நகா், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.

மாவட்டங்களில் மணிக்கு 30 கி.மீ. முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘டவ்-தே’ புயல் வடக்கு நோக்கி நகா்ந்து வருவதால், திங்கள்கிழமை முதல் கா்நாடகத்தில் புயலின் தாக்கம் குறைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, கடலில் சிக்கியிருந்த கப்பலை மீட்க சென்ற இழுவை கப்பல் புயல் காற்றில் சிக்கியது. இந்தப் படகில் 9 போ் இருந்தனா். இவா்களில் 4 பேரை இந்திய கப்பற்படையின் ஹெலிகாப்டரும், 5 பேரை படகு மூலம் இந்திய கப்பற்படையும் மீட்டது.

மீட்கப்பட்டவா்களுக்கு மருத்துவ உதவி செய்துதரப்பட்டுள்ளது. இந்த மீட்புப் படையில் ஈடுபட்டதற்காக இந்திய கப்பற்படை, கடலோட காவல் படைக்கு முதல்வா் எடியூரப்பா நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

திமுக தொண்டா் மீது தாக்குதலைக் கண்டித்து சாலை மறியல்

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT