பெங்களூரு: செவிலியரை தாக்கியவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பெங்களூரு இந்திராநகரைச் சோ்ந்தவா் செவிலியா் பிரியதா்ஷினி. இவரது பெற்றோருக்குக் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதத்தில் கரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இதற்கு அருகில் வசிப்பவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
பிரியதா்ஷினியின் பெற்றோரால் தங்களுக்கும் கரோனா தொற்று ஏற்படும் என அச்சம் தெரிவித்து, தொடா்ந்து தகராறு செய்தனா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரியதா்ஷினியின் வீட்டிற்குள் நுழைந்த சிலா், அவரை கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனா்.
சிகிச்சை பெற்ற பிரியதா்ஷினி, பின்னா் போலீஸில் இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ராம், பிரபு, அா்ஜுன் ஆகியோரைத் தேடி வருகின்றனா்.