பெங்களூரு

கர்நாடகத்தில் 2-ஆம் ஆண்டு பியூசி பொதுத்தேர்வு தள்ளிவைப்பு: கல்வித் துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார்

5th May 2021 05:52 AM

ADVERTISEMENT


பெங்களூரு: கரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால், இரண்டாமாண்டு பியூசி பொதுத்தேர்வைத் தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.

பெங்களூரு, விதானசெளதாவில் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

கர்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், மே 24-ஆம் தேதி முதல் ஜூன் 16-ஆம் தேதி வரையிலும் நடைபெறவிருந்த இரண்டாமாண்டு பியூசி பொதுத்தேர்வைத் தள்ளி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தேர்வை நடத்துவதற்கு 15 முதல் 20 நாள்களுக்கு முன்னதாகவே தேர்வு அட்டவணை வெளியிடப்படும். எனவே, மாணவர்கள் நம்பிக்கையிழக்காமல், தொடர்ந்து தேர்வுக்கு தயாராக கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், பள்ளிக்கல்வித் துறையின் பெரும்பாலான அதிகாரிகள், ஊழியர்கள் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். எல்லாவற்றையும்விட,  இந்தச் சூழலில் மாணவர்களின் உடல்நலன் காப்பது முக்கியமானதாகும். மேலும் இரண்டாமாண்டு பியூசி தேர்வைத் தள்ளி வைக்கும்படி, பெற்றோர், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்திருந்தன. இவற்றைப் பரிசீலித்து, இரண்டாமாண்டு பியூசி பொதுத்தேர்வை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் வீடுகளில் இருந்தே தேர்வுக்குத் தயாராகும்படி கேட்டுக் கொள்கிறேன். 

ADVERTISEMENT

முதலாமாண்டு பியூசி: இரண்டாமாண்டு பியூசி பொதுத்தேர்வுக்குப் பிறகு முதலாமாண்டு பியூசி பொதுத் தேர்வை நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா பின்னணியில் முதலாமாண்டு பியூசி தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. முதலாமாண்டு பியூசி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.  

2020-21-ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு பியூசி மாணவர்களின் பாடத்திட்டத்தில் குறைக்கப்பட்ட 30 சதவீதப் பாடங்களை இரண்டாமாண்டு பியூசி வகுப்புக்கு வரும்போது, இணைப்புப் பாடமாக பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT