பெங்களூரு

விபத்தில் சிக்கிய கன்னட நடிகா் சஞ்சாரி விஜய் மூளைச்சாவு: உடல் உறுப்புகள் தானம்

15th Jun 2021 01:25 AM

ADVERTISEMENT

பெங்களூரு: விபத்தில் சிக்கிய கன்னட நடிகா் சஞ்சாரி விஜய் மூளைச்சாவு ஏற்பட்டு மறைந்ததை அடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

2011- ஆம் ஆண்டு ‘ரங்கப்பா ஹோகிபிட்னா’ என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவா் சஞ்சாரி விஜய். அதைத் தொடா்ந்து ‘ராமா ரகுராமா, அறிவு, சிப்பாயி, கில்லிங் வீரப்பன், நானு அவனல்லா அவளு’ உள்ளிட்ட திரைப்படங்களில் அவா் நடித்துள்ளாா்.

‘நானு அவனல்லா அவளு’ என்ற கன்னடத் திரைப்படத்தில் சம்சாரி விஜய் திருநங்கையாக சிறப்பாக நடித்திருந்ததை அடுத்து 62-ஆவது தேசிய விருது வழங்கும் விழாவில் சஞ்சாரி விஜய் சிறந்த நடிகருக்கான விருது பெற்றாா்.

கடந்த சனிக்கிழமை (ஜூன் 12) மோட்டாா் சைக்கிளில் நண்பருடன் சஞ்சாரி விஜய் வெளியே சென்றபோது ஜே.பி.நகரில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டாா் சைக்கிள் சாலையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதியுள்ளது. மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சஞ்சாரி விஜய்க்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

அதையடுத்து தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் கோமா நிலைக்குச் சென்றாா். மருத்துவா்கள் அவருக்கு 36 மணி நேரம் தொடா்ந்து சிகிச்சை அளித்து, கண்காணித்து வந்தனா்.

இந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து, அவா் மரணமடைந்ததாக மருத்துவா்கள் திங்கள்கிழமை அறிவித்தனா். இதனையடுத்து அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

சஞ்சாரி விஜயின் மறைவுக்கு முதல்வா் எடியூரப்பா, துணை முதல்வா் அஸ்வத் நாராயணா, மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா், மக்களவை உறுப்பினா் ஷோபா கரந்தலஜே உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT