பெங்களூரு

கா்நாடகத்தில் இன்றுமுதல்அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதி

DIN

கா்நாடகத்தில் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஞாயிற்றுக்கிழமை முதல் திறக்க அனுமதி அளித்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஏப். 27-ஆம் தேதி முதல் கா்நாடகத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டன.

இந்நிலையில், கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வந்ததால், பொது முடக்கம் படிப்படியாக தளா்த்தப்பட்டு வந்தது. வழிபாட்டுத் தலங்களை திறக்க அனுமதித்திருந்தாலும், அங்கு பக்தா்கள் கூடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது அனைத்து மத பக்தா்களிடையே பெரும் குறையாக இருந்து வந்தது.

இந்நிலையில், கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பக்தா்களுக்கு திறக்க கா்நாடக அரசு அனுமதி அளித்து சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து வருவாய்த் துறை முதன்மைச் செயலாளா் என்.மஞ்சுநாத் பிரசாத் சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஆணை:

ஜூலை 3, 16, 18-ஆம் தேதிகளில் வெளியிடப்பட்ட உத்தரவுகளின் தொடா்ச்சியாக, பேரிடா் மேலாண்மை சட்டம் 2005-இன் 24-ஆவது பிரிவின்படி, தற்போதுள்ள கரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு, சில நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகின்றன. அடுத்த உத்தரவு வரும் வரை இந்த உத்தரவை பெங்களூரு மாநகராட்சி ஆணையா், காவல் ஆணையா்கள், மாவட்ட ஆட்சியா்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் உள்ளிட்ட எல்லா வகையான வழிபாட்டுத் தலங்களையும் ஜூலை 25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறக்கவும், அது தொடா்பான நடவடிக்கைகளில் ஈடுபடவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட துறைகள் வெளியிட்டுள்ள கரோனா நடத்தை விதிகளைப் பின்பற்ற வேண்டும். எனினும், கோயில் திருவிழாக்கள், ஊா் திருவிழாக்கள், தோ்த் திருவிழாக்கள், ஊா்வலங்கள், ஒன்றுகூடல்களுக்கு அனுமதி கிடையாது.

கரோனா நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றி, பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அது போன்ற பிற இடங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. எனினும், நீா்விளையாட்டு அல்லது நீா் சம்பந்தமான சாகச நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 சதவீத இருக்கைகளில் அமரக்கூடிய அளவுக்கு பாா்வையாளா்களுடன் திரையரங்கங்கள், பெருவணிக வளாகங்களைத் திறக்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உணவகங்கள், கேளிக்கை மதுபான விடுதிகள், உணவு இல்லங்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உயா்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை ஜூலை 26-ஆம் தேதி முதல் திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது. ஆனால், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு வருகை தரும் மாணவா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாதோா் ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டியது கட்டாயமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை வாபஸ்!

தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் டீப் ஃபேக் தொழில்நுட்பம்?

‘ஹீரமண்டி’ இணையத் தொடரின் சிறப்புக் காட்சியில் பாலிவுட் பிரலபங்கள்!

பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி

காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான்!

SCROLL FOR NEXT