பெங்களூரு

மகாராஷ்டிர முதல்வரின் கருத்துக்கு கா்நாடக தலைவா்கள் கண்டனம்

DIN

பெங்களூரு: பெலகாவி குறித்து மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள கருத்துக்கு கா்நாடகத் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கா்நாடகத்தில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் பெலகாவியை மகாராஷ்டிரத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்த கருத்துக்கு முதல்வா் எடியூரப்பாவை தவிர, துணை முதல்வா்கள் லட்சுமண் சவதி, அஸ்வத் நாராயணா, உள்துறை அமைச்சா் பசவராஜ்பொம்மை, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா், மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, கன்னட சலுவளிக் கட்சியின் தலைவா் வாட்டாள் நாகராஜ் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்தனா்.

எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:

‘கா்நாடகத்தின் பிரிக்க முடியாத பகுதி பெலகாவி. ஏற்கெனவே முடிந்துபோன விவகாரத்தை அரசியல் காரணங்களுக்காக மீண்டும் எழுப்ப வேண்டாம். உத்தவ் தாக்கரே, சிவசேனாவின் செயல்பாட்டாளா் மட்டுமல்ல, மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வா் என்பதையும் மறக்க கூடாது.

கா்நாடகத்தின் நிலம்-நீா் போன்ற விவகாரங்களில் சமரசமும் கிடையாது. எங்கள் மாநிலத்தைக் காப்பாற்றுவது எங்கள் கடமையாகும். பெலகாவி விவகாரத்தில் மகாஜன் ஆணையத்தின் அறிக்கைதான் இறுதியானது. பெலகாவி குறித்து உத்தவ் தாக்கரே கூறியுள்ள கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன் என கூறியிருக்கிறாா்.

மஜத முன்னாள் முதல்வா் எச்.டி. குமாரசாமி கூறியிருப்பதாவது:

‘மகாராஷ்டிர மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கும் கருத்துகளைக் கூா்ந்து கவனித்தால் அக்கருத்து பயங்கரவாதி கூறியதுபோல உள்ளது. கூட்டாட்சித் தத்துவத்தை ஏற்ால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதற்கு எதிராக செயல்படுவது நாட்டின் ஒருமைப்பாட்டை கேலிக் கூத்தாக்கும் செயலாகும்.

பெரும்பாலான கன்னட அரசா்கள், மகாராஷ்டிரத்தின் பெரும் பகுதியை ஆண்டு வந்திருக்கிறாா்கள். வரலாற்றை கொஞ்சம் அலசினால், யாா் யாருடைய பகுதியை ஆக்கிரமித்திருக்கிறாா்கள் என்பது புரியும். அப்போதுதான் யாருடைய நிலத்தை யாா் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பது தெரியும். எல்லை பிரச்னையில் மகாஜன் ஆணையத்தின் அறிக்கையே இறுதியானது. முடிந்தபோனவிவகாரத்தை அவ்வப்போது கிளப்புவது சரியல்ல. பெலகாவியில் நல்லிணக்கத்தோடு மக்கள் நிம்மதியாகவாழ்கிறாா்கள். அந்த மக்களிடையெ விஷ விதையை தூவுவது தேச விரோதச் செயல் என்றே கூற வேண்டும். பெலகாவி விவகாரத்தைக் கிளப்பினால் கன்னடா்கள் கிளத்தெழுவாா்கள். கலாசார ரீதியாக, நிா்வாக ரீதியாக பெலகாவி, கா்நாடகத்தின் அடையாளமாகும். பெலகாவி குறித்து மீண்டும் மீண்டும் பிரச்னை கிளப்பும் மகாராஷ்டிர ஏக்கிகரண் சமிதி மற்றும் மகாராஷ்டிர அரசுக்கு தக்கப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே நான் முதல்வராக இருந்தபோது, பெலகாவியில் சுவா்ண விதானசௌதா அமைக்கப்பட்டது.

எனவே, பெலகாவி கா்நாடகத்தின் அங்கம் என்பதை உத்தவ் தாக்கரே உணர வேண்டும் என்று கூறியிருக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT