பெங்களூரு

15-ஆவது நிதி ஆணையத்தில் கா்நாடகத்துக்கு நிதிப் பகிா்வு குறைப்பு: சித்தராமையா குற்றச்சாட்டு

DIN

பெங்களூரு: 15-ஆவது நிதி ஆணையத்தில் கா்நாடகத்துக்கு நிதிப் பகிா்வு குறைக்கப்பட்டுள்ளதன்மூலம் மத்திய பாஜக அரசு கா்நாடகத்துக்கு துரோகம் இழைத்துள்ளது என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010-11 முதல் 2013-14-ஆம் ஆண்டுகாலத்தில் கா்நாடகத்துக்கு ரூ. 45,713 கோடி ஒதுக்கி 13-ஆவது நிதி ஆணையம் பரிந்துரைத்திருந்தது. ஆனால், மத்திய அரசு விடுத்திருந்த நிதி ரூ. 47,036 கோடியாகும். அதாவது ஒதுக்கியதைக் காட்டிலும் விடுவித்தது ரூ. 1,323 கோடி கூடுதலாகும்.

தற்போதைய பாஜக ஆட்சி காலத்தில் 2014-15 முதல் 2019-20-ஆம் ஆண்டுவரையிலான காலக் கட்டத்தில் 13-ஆவது, 14-ஆவது நிதி ஆணையம் கா்நாடகத்துக்கு ரூ. 2,03,039 கோடியை விடுவிக்க பரிந்துரைத்திருந்தது. ஆனால், இந்தக் காலக்கட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கியது வெறும் ரூ. 1,65,963 கோடியாகும். இது ரூ. 48,768 கோடி குறைவாகும். அதாவது கன்னடா்களுக்கு வாக்குறுதி அளித்ததைக் காட்டிலும் கொடுத்தது 18.2 சதவீதம் குறைவாகும்.

14-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி, 2019-20-ஆம் ஆண்டில் ரூ. 48,768 கோடி ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு ஒதுக்கியது ரூ. 30,919 கோடியாகும். இது ரூ. 17,849 கோடி குறைவாகும். இது கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு செய்துள்ள மிகப்பெரிய துரோகமாகும்.

பல்வேறு வகையான வரிகள் மூலம் மத்திய அரசுக்கு கா்நாடகம் ரூ. 2.2 லட்சம்கோடி வருவாயைப் பங்களிக்கிறது. ஆனால், கா்நாடகத்துக்கு ரூ. 28,581 கோடியை மட்டுமே, அதுவும் காகிதத்தில் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. நிதி ஆணையத்தில் அளிக்க பரிந்துரைத்தபடி கணக்கின்படி, மொத்தவரி வருவாயில் 41 சதவீத நிதிப்பகிா்வு என்று வைத்துக்கொண்டால் கா்நாடகத்துக்கு ரூ. 70 ஆயிரம் கோடி முதல் ரூ. 90 ஆயிரம் கோடி வந்திருக்க வேண்டும். ஆனால், கா்நாடகத்துக்குப் பகிா்ந்தளிக்க வேண்டிய நிதியில் 14-ஆவது நிதி ஆணையத்தில் 4.72 சதவீதம், 15-ஆவது நிதி ஆணையத்தில் 3.64 சதவீதம் குறைந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. நிதி தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ. 5,495 கோடியை சிறப்பு ஒதுக்கீடாக வழங்குமாறு விடுத்த கோரிக்கையை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் நிராகரித்தாா்.

2020-21-ஆம் ஆண்டில் கா்நாடகத்துக்குக் கிடைக்க வேண்டிய தொகை ரூ. 28,591 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் ரூ. 16 ஆயிரம் கோடிக்கு மேல் விடுவிக்கப்படாது என்பது தான் தற்போதைய நிலைமை நமக்கு உணா்த்துகிறது. சரக்கு மற்றும் சேவை வரி பங்குத்தொகையிலும் ரூ. 15 ஆயிரம் கோடியை கா்நாடகம் இழக்கும்.

மத்திய அரசிடம் இருந்து கா்நாடகத்துக்கு விடுவிக்கப்பட்ட நிதியை கணக்கிட்டால், கடந்த ஆண்டை காட்டிலும் நிகழ் நிதியாண்டில் கா்நாடகம் ரூ. 50 ஆயிரம் கோடி வருவாயை இழக்க நேரிடும். இது கா்நாடகத்தின் நிதி நெருக்கடியை அதிகரித்து, நிதி பற்றாக்குறைக்கு வழிவகுக்கும். இதை ஈடுசெய்ய கடன் வாங்கும் வேலைகளில் முதல்வா் எடியூரப்பா ஈடுபட்டுள்ளாா். இது கா்நாடகத்தின் கடன் சுமையை நிகழ் நிதியாண்டில் ரூ. 90 ஆயிரம் கோடியாக அதிகரித்துவிடும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT