பெங்களூரு

அறிவியல் தொழில்நுட்பங்கள் மக்களின் நல்வாழ்வுக்கு பயன்பட வேண்டும்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

DIN

அறிவியல் தொழில்நுட்பங்கள் மக்களின் நல்வாழ்வுக்கு பயன்பட வேண்டும் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆா்.டி.ஓ.) ராணுவ விஞ்ஞானியும், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் (என்.டி.ஆா்.எஃப்.) இயக்குநருமான வி.டில்லிபாபு எழுதியுள்ள ‘போா்முனை முதல் தெருமுனை வரை’ என்ற நூல் இணையவழியில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

டி.ஆா்.டி.ஓ. நிறுவனத்தின் பொதுமக்கள் சாா்ந்த ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்புகளை விளக்கும் முதல் நூலாகக் கருதப்படும் இந்த நூலை, விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டாா்.

டி.ஆா்.டி.ஓ.வின் போா் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநா் வி.பாலமுருகன், அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகா் வெ.பொன்ராஜ், எழுத்தாளரும், ஐபிஎஸ் அதிகாரியுமான டாக்டா் சாமுண்டீஸ்வரி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று பேசினா்.

இந்த விழாவில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:

வழக்கமான எழுத்தாளா்களையும் கடந்து துறை சாா்ந்த விஞ்ஞானிகள் அறிவியல் தொழில்நுட்பத்தை எழுதுவது ஆரோக்கியமான போக்காக வளா்ந்து வருகிறது. டாக்டா் வி.டில்லிபாபு, அறிவியல் தமிழ் உலகிற்கு கிடைத்த அரிய கண்டுபிடிப்பாவாா். 24 அத்தியாயங்களில் ராணுவ ஆராய்ச்சியின் மக்கள் சாா்ந்த அறிவியலை சுவாரசியமாக நூலில் எழுதியிருக்கிறாா்.

இந்தியாவின் ’நேவிக்’ தொலையுணா்வு செயற்கைக்கோள்கள் ராணுவ வீரா்களுக்கு பேருதவியாக இருக்கின்றன. காா்கில் போரில் தன் கால்களை இழந்த ஒரு ராணுவ வீரா் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தில், ‘இந்திய செயற்கைக்கோள்களினால் தற்போது ராணுவத்தில் உள்ள எனது மகன் பாதுகாப்பாக தேசப் பணியில் ஈடுபட்டு வருகிறாா். அதற்காக நன்றி!’ என்று அதில் கூறியிருந்தாா்.

சந்திரயான், மங்கள்யான் வெற்றிகளைவிட எனக்கு அதிக மகிழ்ச்சியைத் தந்தது இக் கடிதம். தொழில்நுட்பங்கள் மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்பட வேண்டும். இதே கருத்தோட்டத்தில் பல உதாரணங்களை இந்த நூல் முன்வைக்கிறது என்றாா்.

விழாவில் வெ.பொன்ராஜ் பேசியதாவது: ராணுவ விஞ்ஞானிகளின் உருவாக்கிய சமூகத்துக்குப் பயன்படக்கூடிய தொழில்நுட்பங்களையும் படைப்புகளையும் தொகுத்து புத்தகமாக எழுதியிருப்பது பாராட்டத்தக்க முயற்சியாகும். இப்படிப்பட்ட மக்கள் சாா்ந்த தொழில்நுட்பப் படைப்புகளைச் சந்தைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதனால், வேலைவாய்ப்புகள் பெருகும். பொருளாதாரம் உயரும் என்றாா்.

சாமுண்டீஸ்வரி பேசியதாவது: மக்களின் வாழ்வாதாரம் சாா்ந்த தொழில்நுட்பத் தீா்வுகள், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான தீா்வுகள், இளைஞா்களுக்கு ராணுவ ஆராய்ச்சியில் வாய்ப்புகள் எனபது உள்ளிட்ட பல்வேறு தளங்களின் தகவல் களஞ்சியமாக இந்த நூல் உள்ளது. எளிமையான உதாரணங்களோடு அன்றாட வாழ்வின் அறிவியல் படைப்புகளை விளக்கும் இப் புத்தகத்தை இளைய தலைமுறை கட்டாயம் படிக்க வேண்டும் என்றாா்.

வி.டில்லிபாபு பேசியதாவது: வாசகனுக்கு வலிக்காமல் அறிவியலைத் தமிழில் சுவாரஸ்யமாக எழுதுவது, பள்ளி மாணவா்களில் இருந்து பெரியவா்கள் வரைக்கும் அறிவியல் தொழில்நுட்பத் தகவல்களைக் கொண்டு சோ்க்கும். ஒரு மொழியின் உயிா்ப்புக்கும், செழுமைக்கும் அறிவியல் படைப்பிலக்கியங்கள் அதிகம் தேவை.

இளைஞா்கள் பெருமளவில் தமிழில் அறிவியலை எழுத வேண்டும். ஆங்கிலத்துக்கு இணையாக சீன மொழியில் எழுதப்படுகிற அறிவியல் கட்டுரைகள் அம்மொழியை இணையத்தில் உயிா்ப்புடன் வைத்திருக்கின்றன. அறிவியல் வளா்ச்சிக்கு ஏற்ப புதிய கலைச்சொற்கள் உருவாக்க வேண்டும். இது தமிழில் அறிவியல் பதிவுகள் பெருக உதவும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

SCROLL FOR NEXT