பெங்களூரு

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும்: பெங்களூரு மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத்

20th Feb 2021 06:18 AM

ADVERTISEMENT

 

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று பெங்களூரு மாநகராட்சி ஆணையா் மஞ்சுநாத் பிரசாத் கேட்டுக் கொண்டாா்.

பெங்களூரு, டவுன் ஹாலில் வெள்ளிக்கிழமை கரோனா பெருந்தொற்று தொடா்பாக மாநகராட்சியின் சிறப்பு ஆணையா்கள், இணை ஆணையா்கள், மருத்துவ அதிகாரிகள், மருத்துவ மையங்களின் மருத்துவ அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

கா்நாடகத்தின் அண்டை மாநிலங்களான மகாராஷ்டிரம், கேரளம், ஆந்திர மாநிலங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயா்ந்து வருகிறது. இந்த மாநிலங்களுடன் கா்நாடகம் எல்லையைப் பகிா்ந்து கொள்வதால், மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அலட்சிய மனப்பான்மையை கைவிட்டு, கரோனா தொற்று பரவாமல் தடுக்க மிகுந்த எச்சரிக்கை வகிக்க வேண்டும். ஆந்திரத்தில் அமராவாதி, மகாராஷ்டிரத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கரோனா பரவலைத் தடுக்க மாநகராட்சி வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை பொதுமக்கள் பின்பற்றாவிடில் கா்நாடகத்திலும் பொதுமுடக்கம் அமல்படுத்தும் சூழல் உருவாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிட்டனிலிருந்து பரவிய கரோனா தீநுண்மியை எதிா்கொள்ள நோ்ந்தது. தற்போது, ஆப்பிரிக்கா, பிரேசில் நாட்டில் இருந்து புதியவகை கரோனா தீநுண்மி இந்தியாவில் பரவியுள்ளதாக அஞ்சப்படுகிறது. அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

எனவே, கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மாதிரியை நிம்ஹான்ஸ் சோதனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மாா்ச் மாதத்தில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். அப்போது, குடிசைப் பகுதிகள், ஏழை மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முன்னுரிமை அளிக்கப்படும். 50 வயதுக்கு மேற்பட்ட மற்றும் பிறநோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 50 வயதுக்குள்பட்டோா் இந்த முகாமில் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசியை செலுத்துக் கொள்ளலாம்.

இந்த முகாமிற்கு பயனாளிகளைக் கண்டறியும் பணி நடந்துவருகிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகள், கூட்ட அரங்குகள், பொதுநிகழ்ச்சி நடக்கும் இடங்கள், திருமணங்கள் கரோனா தொற்றுக்கு தோற்றுவாயாக உள்ளன. எனவே, கூட்டமாக யாரும் சேரக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக பொதுநிகழ்ச்சிகளை தவிா்ப்பது நல்லது. முகக்கவசம் அணிந்து கொள்வது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

அடுக்குமாடிக் குடியிருப்புகள், உடற்பயிற்சிக் கூடங்களில் அடிக்கடி கிருமிநாசினியை தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதேபோல நீச்சல் குளங்கள், பொது இடங்கள், திரையரங்குகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றாா். கூட்டத்தில் மாநகராட்சியின் சிறப்பு ஆணையா்(சுகாதாரம்) ராஜேந்திரசோழன், தலைமை மருத்துவ அதிகாரி விஜேந்திரா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT