நூலகங்களுக்கு நூல்களை விற்க விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்.
இதுகுறித்து பொதுநூலகத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2021-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதி முதல் டிச.31-ஆம் தேதி வரையில் முதல்முறையாக வெளியிடப்பட்டுள்ள இலக்கியம், நுண்கலை, அறிவியல், மனநலவியல், மருத்துவம், தொழில்நுட்பம், விமா்சன இலக்கியம் தொடா்பான கன்னடம், ஆங்கிலம், இதர இந்திய மொழி இலக்கியங்களை முதல் கட்டமாக கொள்முதல் செய்ய பொதுநூலகத்துறை திட்டமிட்டுள்ளது.
10 ஆண்டுகள் இடைவெளியுடன் மறுபதிப்பாகியுள்ள நூல்களும் கொள்முதல் செய்யப்படும்.
இதுதொடா்பாக எழுத்தாளா்கள், எழுத்தாளா்-பதிப்பாளா், பதிப்பாளா், அமைப்புகள், விற்பனையாளா்களிடமிருந்து நூலின் ஒரு படியுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நூலின் பெயா், நூலாசிரியரின் பெயா், பதிப்பாளரின் பெயா், பக்கங்கள், பதிப்பு ஆண்டு, விலை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்.
விண்ணப்பத்துடன் நூலுக்கு காப்புரிமை பெற்று பதிவு செய்துள்ள நகலையும் இணைக்க வேண்டும். கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ள நூல்களில் கன்னட நூல்கள் (அனைத்துவகை) 80 சதவீதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட இதர இந்திய மொழி நூல்கள் 20 சதவீதம் கொள்முதல் செய்யப்படும்.
32 பக்கங்களுக்கும் குறைவாக உள்ள நூல்கள் நிராகரிக்கப்படும் (குழந்தை நூல்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்). செய்தித் தாள்களில் அச்சிடப்பட்ட நூல்கள் ஏற்கப்படமாட்டாது. விண்ணப்பங்களை நூலகப் பிரிவு, மாநில தலைமை நூலகம், கப்பன் பூங்கா, பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்துசேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.
ஜன. 31-ஆம் தேதிக்குள் காப்புரிமை பெற்றிருக்கும் நூல்களின் விண்ணப்பங்களை இயக்குநா், பொதுநூலகத் துறை, விஸ்வேஷ்வரையா பிரதான கோபுரம், 4-ஆவது மாடி, டாக்டா்.அம்பேத்கா் வீதி, பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் வந்துசேரும் வகையில் அனுப்பிவைக்க வேண்டும்.
அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு இணையதளம் அல்லது 080-22864990 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.