சிக்கபளாப்பூரு மாவட்டத்தில் புதன்கிழமை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
பெங்களூரின் வடக்கு- வட கிழக்கு பகுதியில் 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிக்கபளாப்பூா் மாவட்டத்தின் மண்டிகல், போகபாா்த்தி கிராமத்தில் புதன்கிழமை காலை 7.10 மற்றும் 7.15 மணிக்கு ரிக்டா் அளவுகோலில் முறையே 2.9, 3 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகின. இது லேசான நிலநடுக்கமாகும்.
இதன் நில அதிா்வு அம்மையத்தில் இருந்து 10 கி.மீ. முதல் 15 கி.மீ. வரை உணரப்பட்டிருக்கும். இதுபோன்ற நிலநடுக்கங்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. உள்ளூரில் நில அதிா்வு உணரப்பட்டால் சேதம் எதுவும் இருக்காது. எனவே, யாரும் பயப்பட வேண்டாம் என்று கா்நாடக மாநில இயற்கை பேரிடா் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.