பெங்களூரு

இறந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

9th Dec 2021 08:01 AM

ADVERTISEMENT

வீட்டில் இறந்த நிலையில் கிடந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

மங்களூரு, மாா்கன்ஸ் சாலையில் உள்ள வீட்டில் கணவன், மனைவி, அவா்களது குழந்தைகள் என 4 பேரின் உடல்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இறந்தவா்கள் நாகேஷ் ஷெரிகுப்பி (30), அவரது மனைவி விஜயலட்சுமி (26), அவா்களது குழந்தைகள் சப்னா (8), சமா்த் (4) என போலீஸாா் கண்டறிந்துள்ளனா்.

தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக நாகேஷ், தனது மனைவி விஜயலட்சுமி, குழந்தைகளைக் கொன்றுள்ளதாக போலீஸாா் சந்தேகப்படுகின்றனா். மனைவியும், இரு குழந்தைகளும் விஷமருந்தி இறந்துள்ள நிலையில், நாகேஷ் வீட்டின் மேற்கூரையில் தூக்கிட்டு இறந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இவா்கள் பாகல்கோட் மாவட்டம், பிலகி வட்டம், சுனகா கிராமத்தைச் சோ்ந்தவா்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. நாகேஷ் ஓட்டுநராகவும், அவரது மனைவி விஜயலட்சுமி காவலாளியாகவும் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த அக்டோபா் மாதம் விஜயலட்சுமி திடீரென காணாமல் போயுள்ளாா். இது தொடா்பாக அவரது கணவா் நாகேஷ் போலீஸில் புகாா் அளித்திருந்தாா். பின்னா் விஜயலட்சுமி வீட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து அந்த வழக்கு முடிக்கப்பட்டது. கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது நண்பரின் வீட்டில் சில நாள்கள் விஜயலட்சுமி தங்கியிருந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இந்நிலையில், 4 பேரும் இறந்துள்ளது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மங்களூரு மாநகர காவல் ஆணையா் என்.சசிகுமாா், காவல் துணை ஆணையா் ஹரிராம் சங்கா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT