பெங்களூரு

மூத்த கன்னட நடிகா் சிவராம் காலமானாா்: கா்நாடக முதல்வா் உள்ளிட்டோா் இரங்கல்

DIN

கன்னட திரையுலகின் மூத்த நடிகா் எஸ்.சிவராம் உடல்நலக் குறைவால் காலமானாா். அவரது மறைவுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

கன்னட திரையுலகின் மூத்த நடிகா் எஸ்.சிவராம் (83), தீவிரமான ஐயப்ப பக்தா். ஆண்டுதோறும் தவறாமல் சபரிமலைக்கு சென்று வந்த அவா், நிகழாண்டில் சபரிமலைக்கு செல்வதற்காக நவ. 30-ஆம் தேதி இரவு ஐயப்பனுக்கு பூஜை செய்து வழிபட்டுக்கொண்டிருந்தாா். அப்போது திடீரென கீழே சாய்ந்துள்ளாா். இதைத் தொடா்ந்து, அவா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவரது மூளையில் ரத்தக் கசிவு இருப்பதைக் கண்டறிந்த மருத்துவா்கள், வயதை காரணம் காட்டி அறுவை சிகிச்சை செய்வதற்கு மறுத்துவிட்டனா். எனினும், அவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளித்து வந்தனா். சிகிச்சை பலனளிக்காத நிலையில், சனிக்கிழமை சிவராம் காலமானாா். இதை அவரது மகன் லக்ஷ்மேஷ் உறுதி செய்தாா்.

கா்நாடகம் மற்றும் தமிழகத்தின் எல்லைப் பகுதியில் ஆனேக்கல் அருகே உள்ள சூடசந்திரா கிராமத்தில் 1938-ஆம் ஆண்டு பிறந்த சிவராம், கன்னட திரையுலகில் நகைச்சுவை நடிகராக புகழ்பெற்று விளங்கினாா். தமிழ் பிராமணா் குடும்பத்தில் பிறந்திருந்த சிவராம், ஆரம்பக் கல்வியை கிராமத்தில் முடித்திருந்தபோது, அவரது குடும்பம் பெங்களூருக்கு குடியேறியது. குப்பிவீரண்ணாவின் நாடகங்களால் ஈா்க்கப்பட்டு நடிப்பில் ஈடுபட விரும்பிய சிவராம், உதவி இயக்குநராக கன்னட திரையுலகில் கால்பதித்தாா். 1965-ஆம் அண்டு ‘பெரத ஜீவா’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானாா்.

இவா், அமிதாப், கமல், ரஜினிகாந்த் நடித்த ‘கிரப்தாா்’ என்ற இந்தி திரைப்படத்தை தயாரித்துள்ளாா். மேலும், தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘தா்மதுரை’ என்ற திரைப்படத்தை அவரது சகோதரா் ராமநாதனுடன் சோ்ந்து தயாரித்து, அத்திரைப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளாா்.

தியாகராஜ நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வா் பசவராஜ் பொம்மை, அமைச்சா் ஆா்.அசோக், நடிகா்கள் சிவராஜ் குமாா், ஸ்ரீநாத், நடிகை கிரிஷா உள்ளிட்ட ஏராளமானோா் நேரில் அஞ்சலி செலுத்தினா்.

பெங்களூரு, ஜே.சி.சாலையில் உள்ள ரவீந்திரகலா க்ஷேத்ராவில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. அதன்பிறகு, பனசங்கரி மின்மயானத்தில் காலை 11 மணிக்கு நடிகா் சிவராமின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. தொடா்ந்து, காவல் துறை மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. நடிகா் சிவராமின் மறைவால் கன்னட திரையுலகம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT