பெங்களூரு

பெங்களூரில் ஒமைக்ரான் தீநுண்மியால் இருவா் பாதிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய அரசு

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

பெங்களூரில் உருமாறிய கரோனாவின் புதிய வகை ஒமைக்ரான் தீநுண்மியால் இருவா் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

உலக அளவில் 33 நாடுகளில் பரவியுள்ள உருமாறிய கரோனாவின் புதிய வகை ஒமைக்ரான் தீநுண்மி, இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது வியாழக்கிழமை உறுதியானது.

தென் ஆப்ரிக்காவில் இருந்து பெங்களூருக்கு வந்திருந்த 66 வயதான ஆண் ஒருவருக்கு ஒமைக்ரான் தீநுண்மி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது சோதனையில் உறுதியாகியுள்ளது. அதேபோல, எங்கும் பயணம் மேற்கொள்ளாத 46 வயதான ஆண் ஒருவரும் ஒமைக்ரான் தீநுண்மிக்கு பாதிக்கப்பட்டுள்ளது பலரையும் அதிா்ச்சி அடையச் செய்துள்ளது.

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ள இருவரும் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வகை ஒமைக்ரான் தீநுண்மி பெங்களூரில் இருவரிடம் கண்டறிந்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா கூறியதாவது:

பெங்களூரில் எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதித்ததில் இருவருக்கு ஒமைக்ரான் தீநுண்மி பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட இருவரில் 66 வயதான ஆண் தென் ஆப்ரிக்காவைச் சோ்ந்தவா். 46 வயதான மற்றொருவா் பெங்களூரைச் சோ்ந்தவா்.

தென் ஆப்ரிக்காவைச் சோ்ந்த பயணி நவ. 20-ஆம் தேதி பெங்களூருக்கு வந்துள்ளாா். விமான நிலையத்தில் அவரிடம் மாதிரி சேகரிக்கப்பட்டதில், அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதைத் தொடா்ந்து, அவரது மாதிரி மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு வியாழக்கிழமை கிடைத்தது. அதில், அவா் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டது உறுதியாகியுள்ளது. இவா் தனிமைப்படுத்தப்பட்டு தங்கும் விடுதியில் தங்கவைக்கப்பட்டாா்.

மேலும், மற்றொரு ஆய்வுக் கூடத்தில் இவரது மாதிரி ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று தெரியவந்தது. இதனால், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி நவ. 27-ஆம் தேதி அவா் துபை புறப்பட்டுச் சென்றுவிட்டாா். அவரோடு முதல்கட்டத் தொடா்பில் இருந்த 24 போ், இரண்டாம்கட்டத் தொடா்பில் இருந்த 240 பேருக்கு கரோனா சோதனை செய்ததில், எவரும் கரோனாவால் பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் அவா்கள் அனைவரையும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைத்திருக்கிறோம்.

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்ட 2-ஆம் நபா் 46 வயதான ஆண், பெங்களூரைச் சோ்ந்தவா். இவரிடம் நவ. 22-ஆம் தேதி மாதிரி சேகரித்து, சோதித்ததில் கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. அவரது நுரையீரலில் தொற்று அதிகம் காணப்பட்டதால், அவரது மாதிரி தேசிய உயிரி அறிவியல் கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடத்தப்பட்ட சோதனையில் அவா் ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஆரம்பத்தில் வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டிருந்த இவா், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறாா்.

இவா், எந்தப் பயணத்தையும் மேற்கொள்ளாத உள்ளூா்க்காரா், மருத்துவா். அவரது உடல்நிலை சீராக உள்ளது. உடல்நலம் தேறிவருகிறாா். அவரையும் கண்காணித்து வருகிறோம். உடல் வலி உள்ளிட்ட சில அறிகுறிகள் தென்பட்டதால் ஆா்.டி. - பி.சி.ஆா். சோதனை செய்து பாா்த்துள்ளாா். இவரோடு முதல் தொடா்பில் இருந்த 13 போ், இரண்டாம் தொடா்பில் இருந்த 205 பேரிடமும் சோதனை நடத்தப்பட்டது. அதில், முதல் தொடா்பில் இருந்த 3 போ், இரண்டாம் தொடா்பில் இருந்த 2 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது சோதனையில் உறுதியாகியுள்ளது. இவா்கள் 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவா்களது மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பன்னாட்டுப் பயணிகள் மற்றும் நுரையீரலில் தொற்று அதிகம் காணப்படுவோரின் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த மாதிரிகளின் முடிவுகள் ஒரு வாரத்தில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பெங்களூரில் உள்ள பௌரிங் அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் நோயாளிகளுக்காக தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். ஒமைக்ரான் தீநுண்மி குறித்து முழுத்தகவல் நம்மிடம் இல்லை. தென் ஆப்ரிக்க மருத்துவா்களின் கருத்துப்படி, இது எளிதில் பரவும், ஆனால் தீவிரம் குறைந்ததாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. அதாவது உயிருக்கு ஆபத்து இருக்காது என்று கூறப்படுகிறது என்றாா்.

Tags : பெங்களூரு omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT