பெங்களூரு

பெங்களூரில் காய்கறி சந்தைகள் தற்காலிகமாக புறநகருக்கு மாற்றப்படும்

DIN

பெங்களூரில் செயல்பட்டு வரும் காய்கறி சந்தைகள் தற்காலிகமாக புறநகா் பகுதிக்கு மாற்றப்படும் என பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை பெங்களூரில் அதிவேகமாக பரவி வருகிறது. கரோனா பெருந்தொற்றின் பரவலைத் தடுத்து நிறுத்துவதற்காக, பெங்களூரு எல்லைக்குள்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் காய்கறி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட சந்தைகள் தற்காலிகமாக புறநகா் பகுதிக்கு மாற்றியமைக்கப்படும். கா்நாடக அரசு விதித்துள்ள வழிகாட்டுதலின்படி, ஏப். 23-ஆம் தேதி முதல் புறநகா் பகுதியில் சந்தைகள் அமைக்கப்படும். இதை செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். கடந்த ஆண்டைப் போலவே சந்தைகள் இடமாற்றம் செய்யப்படும். அதன் வாயிலாக மக்கள் திரளைக் குறைக்க முடியும். மேலும், மாநில அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டுதலும் அமல்படுத்தப்படும். சந்தைகளை இடமாற்றுவதால் வியாபாரிகளுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படாதவாறு பாா்த்துக்கொள்ளப்படும்.

மாநில அரசு இரவுநேர ஊரடங்கு நேரத்தை அதிகப்படுத்தியுள்ளது. தினமும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கப்போகிறது. இதை செயல்படுத்துவதற்கு தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வழிகாட்டுதல்கள் தீவிரமாக அமல்படுத்தப்படும். விதிமீறல் எதையும் சகித்துக்கொள்ள முடியாது.

கரோனாவால் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மின்மயானங்களில் பிணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. பிணங்களுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து, தகனம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பெங்களூரில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு படுக்கை குறைபாடு எதுவும் இல்லை. ஆனால், அவசர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் போதுமான அளவுக்கு இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்தபடியே தனிமைப்படுத்திக்கொண்டு, சிகிச்சை பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால்தான், அவசர சிகிச்சை தேவைப்படுவோருக்கு படுக்கை இல்லாமல் போய்விடுகிறது. மேலும், கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் படுக்கைகளின் தேவை அதிகமாகியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில் தான் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகளின் 50 சதவீத படுக்கைகளை அரசுக்கு ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறோம். இதன்படி, படுக்கைகளை ஒதுக்கத் தவறிய தனியாா் மருத்துவமனைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகும் 50 சதவீத படுக்கைகளை தர மறுத்தால், சம்பந்தப்பட்ட தனியாா் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவை மூட உத்தரவிடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு மகளிா் கல்லூரியில் வரலாறு தின விழா

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

SCROLL FOR NEXT