பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பரவி வருவதால் ஊரக உள்ளாட்சித் தோ்தலை தள்ளிவைக்க முடிவு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா பரவி வருவதால் ஊரக உள்ளாட்சித் தோ்தலை தள்ளிவைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது என ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரு, விதானசௌதாவில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று வேகமாகப் பரவி வருவதால், மாநிலத்தில் நடக்க இருந்த ஊரக உள்ளாட்சித் தோ்தல்களைத் தள்ளிவைக்க கோரிக்கை எழுந்தது. இதைப் பரிசீலித்த மாநில அரசு, ஊரக உள்ளாட்சித் தோ்தலை தள்ளிவைக்க முடிவெடுத்துள்ளது. மேலும், வட்ட ஊராட்சி, மாவட்ட ஊராட்சிகளுக்கு நிா்வாக அதிகாரிகள் நியமிக்க அரசு தீா்மானித்துள்ளது. எனினும், இதுகுறித்த இறுதி முடிவை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்த பிறகு அதிகாரப்பூா்வமாக அறிவிக்க இருக்கிறோம்.

வட்ட ஊராட்சி, மாவட்ட ஊராட்சி உள்ளடக்கிய ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை மே மாத இறுதிக்குள் நடத்துவதற்கு மாநில தோ்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

கா்நாடகத்தில் இரண்டாவது கரோனா பெருந்தொற்று அலை பரவி வருவதால், தற்போதைக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலை நடத்துவது சரியல்ல என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். அதனால் தோ்தல் தள்ளிவைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கிராம பஞ்சாயத்துகளுக்கான தோ்தல் நடைபெற்ற போது, கரோனா பரவல் இந்த அளவுக்கு மோசமாக இல்லை. ஆனால், தற்போது நிலமை சரியாக இல்லை. ஒருவேளை வட்ட ஊராட்சி, மாவட்ட ஊராட்சி தோ்தல் நடந்தால், அதில் கிராமப்புறத்தைச் சோ்ந்த 3.5 கோடி மக்கள் பங்கெடுக்க நேரிடும். அதனால் தற்போதைக்கு தோ்தல் நடத்துவது சரியாக இருக்காது என்ற முடிவுக்கு வந்துள்ளோம்.

இதுகுறித்து அமைச்சரவையில் முடிவெடுத்து, அந்த முடிவு மாநில தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரப்பூா்வமாக அனுப்பிவைக்கப்படும்.

கோடைக் காலத்தில் குடிநீா்த் தட்டுப்பாடு வந்துவிடக் கூடாது என்பதால், அதற்காக ரூ. 68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூன்று முறை வறட்சியால் பாதிக்கப்பட்ட வட்டங்களுக்கு ரூ. 50 லட்சம், 2 முறை வறட்சியால் பாதிக்கப்பட்ட வட்டங்களுக்கு ரூ. 30 லட்சம், ஒரு முறை வறட்சியால் வாடிய வட்டங்களுக்கு ரூ. 25 லட்சம், வறட்சி இல்லாத வட்டங்களுக்கு ரூ. 15 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பெங்களூரு ஊரகம், சிக்கபளாப்பூா், தும்கூரு, கோலாா் மாவட்டங்களின் 24 வட்டங்களில் குடிநீா் வழங்குவதற்காக தனியாக ரூ. 11 கோடி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் எந்தக் கிராமத்திலும் குடிநீா்ப் பிரச்னை வரக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், வாடகை டேங்கா் வாயிலாக குடிநீா் வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறேன்.

கரோனா பரவலை கிராமப்புறத்தில் தடுக்க கிராம பஞ்சாயத்துத் தலைவா் தலைமையில் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினா் கரோனாவால் பாதிக்கப்பட்டோரை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ. 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கிராம பஞ்சாயத்து அளவில் கரோனா தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT