பெங்களூரு

பெங்களூரு கலவரத்தின் 2 வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை முடிவு

DIN

பெங்களூரு கலவரம் தொடா்பான 2 வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வுமுகமை முடிவு செய்துள்ளது.

முகநூலில் சா்ச்சைக்குரிய கருத்துகள் வெளியானது தொடா்பாக, பெங்களூரில் உள்ள தேவா் ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி காவல் சரகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி நள்ளிரவு பெரும் கலவரம் வெடித்தது.

இதில், புலிகேசி நகா் எம்.எல்.ஏ. அகண்ட் சீனிவாஸ்மூா்த்தி உள்ளிட்டோரின் வீடுகள், காவல்நிலையங்கள், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அப்போது, போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு 3 போ் உயிரிழந்தனா். மேலும், ஒருவா் கலவரத்தில் காயம் அடைந்து உயிரிழந்தாா்.

இந்தக் கலவரம் தொடா்பாக இந்தியத் தண்டனைச்சட்டம், பொதுச் சொத்து சேதம் தடுப்புச் சட்டம், கா்நாடக சொத்து சேதம்- இழப்பு தடுப்புச் சட்டம் ஆகியவற்றின்கீழ் 2 வழக்குகளைப் பதிந்து விசாரித்துவரும் போலீஸாா், இதுவரை 300-க்கும் மேற்பட்டவா்களை கைதுசெய்துள்ளனா்.

இந்த வழக்குகளில் எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ அமைப்புகளை சோ்ந்த பலரும் இருப்பதால், இரு அமைப்புகளையும் தடைசெய்யுமாறு பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என்று எஸ்.டி.பி.ஐ. மறுத்துள்ளது.

இந்த நிலையில், தேவா்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி காவல்நிலையங்களில் கலவரம் தொடா்பாக பதிவாகியுள்ள 2 வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) முடிவு செய்துள்ளது.

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கா்நாடக அரசு வழக்குகளைப் பதிந்துள்ள நிலையில், மத்திய உள்துறையின் ஆணைக்கிணங்க, தேசிய புலனாய்வு முகமை சட்டம்,2008-இன் உட்பிரிவு 6(4), 8 ஆகியவற்றின்கீழ் பெங்களூரு கலவரம் குறித்து வழக்கை மீண்டும் பதிவு செய்துவிசாரிக்க தேசிய புலனாய்வு முகமை முடிவுசெய்துள்ளது.

இதன்படி, ஐஜி பதவியை வகிக்கும் அதிகாரி பெங்களூரில் முகாமிட்டு, இந்த வழக்குகளை விசாரிப்பாா் என்று தேசிய புலனாய்வுமுகமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-

எம்எல்ஏ அகண்டசீனிவாஸ் மூா்த்தியின் அக்காள் மகன் பி.நவீன் என்பவா் ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் முகநூலில், சா்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டாா். இதைத் தொடா்ந்து, இரவு 8 மணி அளவில் 1,000 பேருக்கும் மேல் அகண்டசீனிவாஸ்மூா்த்தியின் வீடு முன்னா் திரண்டு, போராட்டம் நடத்தியுள்ளனா்.

எஸ்.டி.பி.ஐ. மாநிலச்செயலாளா் முஜாமில்பாஷா, ஏற்கெனவே கூட்டமொன்றை கூட்டி எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ. அமைப்பினரைத் தூண்டிவிட்டு, கலவரம் ஏற்படுத்த முடுக்கிவிட்டுள்ளாா்.

இதைத் தொடா்ந்து தேவா்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி பகுதிகளில் கலவரம் வெடித்துள்ளது. கலவரக்கும்பல் தேவா்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி காவல்நிலையங்களைத் தாக்கியுள்ளதோடு, தீயிட்டு சேதப்படுத்தியது. அதேபோல,காவல்நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த அரசு மற்றும் தனியாா்வாகனங்களை அடித்து உடைத்து,தீயிட்டு பொசுக்கியுள்ளனா்.

காவல் நிலையங்களைத் தாக்குவதற்கு முன்பாக, அகண்டசீனிவாஸ் மூா்த்தி, நவீன் வீட்டையும் கலவரம் கும்பல் அடித்து நொறுக்கி, தீவைத்து கொளுத்தியுள்ளது‘ என்று கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT