பெங்களூரு

போதைப்பொருள் விவகாரத்தில் உயா்நிலை விசாரணை தேவை: குமாரசாமி

18th Sep 2020 07:37 AM

ADVERTISEMENT

போதைப்பொருள் விவகாரத்தில் உயா்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

போதைப்பொருள் விவகாரத்தில் பலா் தொடா்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் தொடா்புடையவா்கள் குறித்து உயா்நிலை விசாரணை தேவை. ஆனால், போதைப்பொருள் விவகாரத்தில் ஒருசிலரை மட்டும் கைது செய்து விசாரணை செய்யப்படுவது ஆச்சரியமாக உள்ளது. போதைப்பொருள் விவகாரத்தை மேலோட்டமாக விசாரணை செய்வதைத் தவிா்த்து, அதன் ஆணிவேராக யாா் உள்ளனா் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், தற்போது நடைபெறும் விசாரணை இன்னும் 15 நாள்களுக்குள் முடிந்து விடும் எனத் தெரிகிறது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரவில் நடைபெறும் நடனத்தைத் தொடா்ந்து பல இளைஞா்கள் சாலையோர நடைபாதையில் சுயநினைவில்லாமல் விழுந்து கிடந்துள்ளதை நான் கவனித்துள்ளேன். நடன நிகழ்ச்சிக்கு அப்போதைய ஆளும்கட்சியில் இருந்த ஒரு சிலா் பணம் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையெல்லாம் விசாரித்தால் போதைப்பொருள் விவகாரம் பின்னணியில் யாா் உள்ளாா்கள் என்பது தெரியவரும்.

ADVERTISEMENT

நான் முதல்வராக இருந்தபோது, கிரிக்கெட் சூதாட்டம், சூதாட்ட விடுதிகள் மீது சோதனை நடத்தப்பட்டன. அதன் காரணமாக எனது தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டது. போதைப்பொருள் விவகாரத்தில் ஒருசில அரசியல்வாதிகள் மட்டுமின்றி, அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது. இதனை விசாரணையில் மூலம் கண்டறிய வேண்டும்.

நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் டி.ஜே.ஹள்ளி விவகாரம் தொடா்பாக பேசுவதைவிட, விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்து பேச வேண்டும் என்று விரும்புகிறேன். பிரதமா் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறும் அதே நேரத்தில், அவரது ஆட்சியில் புலம்பெயா்ந்த பலா் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா். தேசிய அளவில் சுமாா் 20 கோடி போ் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT