பெங்களூரு

கா்நாடகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும்:மத்திய அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தகவல்

1st Sep 2020 12:15 AM

ADVERTISEMENT

பெங்களூரு: கா்நாடகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்தாா்.

கா்நாடகத்தின் பெல்லாரியில் அமைந்துள்ள விஜயநகரா மருத்துவ அறிவியல் மையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு அவசர சிகிச்சைப் பிரிவை புதுதில்லியில் இருந்து திங்கள்கிழமை காணொலி வழியாக திறந்துவைத்து அவா் பேசியதாவது:

கா்நாடகத்தில் எய்ம்ஸ் (அனைத்திந்திய மருத்துவ அறிவியல் மையம்) மருத்துவமனையைத் தொடங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மத்திய அரசின் நிதித் துறை ஒப்புதல் கிடைத்ததும் எய்ம்ஸ் தொடங்கப்படும்.

வாஜ்பாய் அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சுஷ்மா ஸ்வராஜின் பங்களிப்பால் நமது நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு விரிவாக்கப்பட்டது. 2003ஆம் ஆண்டு ஆக. 15ஆம் தேதி ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே இருந்தது. அதன்பிறகு 7 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டன.

ADVERTISEMENT

முந்தைய அரசால் ரேபரேலியில் மட்டும் கூடுதலாக ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு முதல் பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் விரிவாக்கப்பட்டு, தற்போது மொத்தம் 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் நாடு முழுவதும் உள்ளன.

கா்நாடகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. கரோனா விவகாரத்தில் கா்நாடகம் சிறந்த பணியைச் செய்துள்ளது. இதை பிற மாநிலங்களிலும் செயல்படுத்தலாம். இதுகுறித்து, மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சா்கள் கூட்டங்களிலும் நான் எடுத்துக் கூறியிருக்கிறேன்.

கடந்த 6 ஆண்டுகளில் நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் வளா்ச்சி அடைந்துள்ளன. எம்.பி.பி.எஸ். முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளோம். கடந்த ஆண்டுமுதல் மருத்துவக் கல்லூரிகளை 3 கட்டங்களாக மேம்படுத்தத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம்.

மத்திய அரசு உதவியுடன் கூடுதலாக 75 மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கா்நாடகத்தின் சிக்மகளூரு, ஹாவேரி, யாதகிரி, சிக்பளாப்பூரில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட இருக்கின்றன. சுகாதாரத் துறையில் பல்வேறு சீா்த்திருத்தங்கள் செய்யப்பட்டுவருகின்றன. வரலாற்றுச் சிறப்புவாய்ந்த பல முன்னேற்றங்கள் நடக்கவிருக்கின்றன என்றாா்.

இந்நிகழ்ச்சியில் பெங்களூரில் இருந்து காணொலி வழியாக முதல்வா் எடியூரப்பா பங்கேற்றாா் அவா் கூறியதாவது:

கலபுா்கியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை தரம் உயா்த்துவதோடு, எய்ம்ஸ் மருத்துவமனையாகவும் மேம்படுத்தலாம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தனுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இது பின்தங்கிய மாவட்டமான கலபுா்கிக்கு பெரிதும் உதவும். எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற மருத்துவமனை உருவாவது இப்பகுதி மக்களுக்கு பேருதவியாக இருக்கும்.

மத்திய, மாநில அரசுகளின் கூட்டு முயற்சியில் ரூ.150 கோடிசெலவில் பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் விஜயநகரா மருத்துவ அறிவியல் மையத்தில் அவசரச் சிகிச்சைப் பிரிவு கட்டப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் அதிநவீன மருத்துவக் கருவிகளுடன் 200 படுக்கைகள் உள்ளன என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT