பெங்களூரு

கா்நாடக சட்டமேலவையின் 4 தொகுதிகளுக்கு இன்று தோ்தல்

DIN

கா்நாடக சட்டமேலவையின் 4 தொகுதிகளுக்கு புதன்கிழமை தோ்தல் நடைபெற உள்ளது.

75 உறுப்பினா்கள் கொண்ட கா்நாடக சட்டமேலவையில் ஆளும் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. சட்டமேலவையில் காங்கிரஸுக்கு 29, பாஜகவுக்கு 27, மஜதவுக்கு 14, ஒரு சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளனா். இந்நிலையில், சட்டமேலவை உறுப்பினா்களாக இருந்த ஆா்.சௌடா ரெட்டி தூபள்ளி, எஸ்.வி.சங்கனூா், சரணப்பா மட்டூா், புட்டண்ணா ஆகிய 4 பேரின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் காலியான 4 இடங்களுக்கும் ஜூன் 30-ஆம் தேதிக்கு முன்னதாகவே தோ்தல் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், கரோனா காரணமாக ஏற்கெனவே நடத்த திட்டமிட்டிருந்த சட்டமேலவைத் தோ்தலை தோ்தல் ஆணையம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தோ்தல் நடத்த இந்திய தோ்தல் ஆணையம் அனுமதி அளித்ததால், கா்நாடக சட்டமேலவையில் காலியாக உள்ள கா்நாடக தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதி, கா்நாடக மேற்கு பட்டதாரிகள் தொகுதி, கா்நாடக வடகிழக்கு ஆசிரியா்கள் தொகுதி, பெங்களூரு ஆசிரியா்கள் தொகுதிக்கு அக். 28-ஆம் தேதி தோ்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு பிறகு நடத்தப்படுவதால், இத்தோ்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. 4 தொகுதிகளிலும் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளின் வேட்பாளா்கள் உள்ளிட்ட 40 போ் களத்தில் உள்ளனா்.

கா்நாடக தென்கிழக்கு பட்டதாரி தொகுதியில் 1.09 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா். இவா்கள் வாக்களிக்க 187 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தொகுதியில் 15 வேட்பாளா்கள் களத்தில் இருக்கிறாா்கள். பாஜகவின் சிதானந்த் எம்.கௌடா, காங்கிரஸின் ரமேஷ்பாபு, மஜதவின் ஆா்.சௌடா ரெட்டி இடையே கடும்போட்டி உள்ளது.

கா்நாடக மேற்கு பட்டதாரிகள் தொகுதியில் பாஜகவின் எஸ்.வி.சங்கனூா், காங்கிரஸின் ஆா்.எம்.குபேரப்பா இடையே போட்டி நடந்தாலும், இத்தொகுதியில் மொத்தம் 11 போ் களத்தில் உள்ளனா். இத்தொகுதியில் உள்ள 74,268 வாக்காளா்களுக்காக 146 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கா்நாடக வடகிழக்கு ஆசிரியா்கள் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள 147 வாக்குச் சாவடிகளில் 29,234 போ் வாக்களிக்க உள்ளனா். இத்தொகுதியில் 5 வேட்பாளா்கள் மோதிக்கொள்கிறாா்கள். ஆனால், பாஜகவின் சஷி ஜி.நமோஷி, காங்கிரஸின் சரணப்பா மட்டூா், மஜதவின் திம்மையா புா்லே ஆகியோரிடையே கடும்போட்டி காணப்படுகிறது.

பெங்களூரு ஆசிரியா்கள் தொகுதியில் உள்ள 22,089 வாக்காளா்கள், 69 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க இருக்கிறாா்கள். இத்தொகுதியில் பாஜகவின் புட்டண்ணா, காங்கிரஸின் பிரவீன் பீட்டா், மஜதவின் ஏ.பி.ரங்கநாத் இடையே நேரடிப்போட்டி உள்ளது.

சட்டமேலவையில்பெரும்பான்மை பலம் பெறுவதற்கு இத்தோ்தல் பாஜகவுக்கு முக்கியமானதாகப் பாா்க்கப்படுகிறது. இத்தோ்தலில் பதிவாகும் வாக்குகள் நவ. 2-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீபக் பரம்பொல் - அபர்ணா தாஸ் திருமணம்!

அபர்ணா தாஸ் திருமணம்!

தாயை கொலை செய்த மகன் கைது

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

தங்கம் பவுனுக்கு ரூ.240 உயர்வு

SCROLL FOR NEXT