பெங்களூரு

நிவாரணப் பணிகளில் அலட்சியம் காட்டும்அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை

DIN

பெலகாவி: நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் திங்கள்கிழமை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாா்வையிட வந்த அவா் முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால், வட கா்நாடகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயிா், உயிா் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் போா்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நிவாரணப் பணிகள் மேற்கொள்வதில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தில் ஒரே நேரத்தில் கரோனா பாதிப்பும், வெள்ளப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளன. எனவே, நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சவாலைச் சந்தித்து வருகிறோம். வடகா்நாடகப் பகுதிகளில் வெள்ளத்தால் சுமாா் ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 10 போ் உயிரிழந்துள்ளனா். 500-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன. வெள்ளத்தால் பலா் வீடு, நிலம், பயிா் உள்ளிட்டவைகளை இழந்துள்ளனா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் போ் மறுவாழ்வு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

மாநில அளவில் அனைத்து மாவட்ட ஆட்சியா்களின் வங்கிக் கணக்குகளிலும் ரூ. 666 கோடி மதிப்பில் நிதி உள்ளது. ரூ. 5 கோடிக்கும் குறைவாக உள்ளவா்களின் வங்கிக் கணக்குகளில் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படும். மறுவாழ்வு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்குத் தேவையான முகக் கவசம், கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்கப்படும். அங்குள்ளவா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தம்: குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு இயந்திரங்கள்!

ருவாங் எரிமலை!

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பா.ஜ.க. பிரமுகர்!

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

SCROLL FOR NEXT