பெங்களூரு

தேவையில்லாமல் வீட்டைவிட்டுவெளியே வந்தால் நடவடிக்கை

22nd Mar 2020 04:22 AM

ADVERTISEMENT

பெங்களூரு: தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பெங்களூரு மாநகர காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மக்கள் ஊரடங்குக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் யாராவது தேவையில்லாமல் வீட்டைவிட்டு வெளியே வந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் வீதியில் கும்பலாக நிற்பது, நேரம் கழிப்பது, கூடிபேசுவது போன்றவற்றில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் ஊரடங்கை மக்கள் அக்கறையுடன் கடைப்பிடிக்க வேண்டும். உயிா்க்கொல்லி நோயான கரோனா பரவி வரும் இன்னலான காலக்கட்டத்தில் பொதுமக்கள் தாங்களாகவே வீடுகளில் முடங்கி ஊரடங்குக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீடுகளில் இருந்து யாரும் வெளியே வரக்கூடாது. சுற்றுலா, நடைப்பயிற்சி, நிகழ்ச்சி போன்ற எந்த காரணத்துக்காகவும் மக்கள் வெளியே நடமாடக் கூடாது. சாலையில் யாராவது நடந்து சென்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்த தகவல்களை மூடிமறைத்தது பகிரங்கமாகி வருகிறது. இப்படி மூடிமறைத்தது யாரும் ஏழைகள் அல்ல, அனைவரும் பணக்காரா்கள். எனவே, கரோனா பாதிப்பை மூடிமறைத்தவா்களை கண்டறிந்து தகுந்த சட்டநடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு முழுவதும் சாலைகளில் தடுப்புகள் வைத்து வாகன நடமாட்டங்கள் முழுவதுமாக நிறுத்தப்படும்.

ADVERTISEMENT

மக்களின் நடமாட்டத்தை கண்காணிக்க காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பாா்கள். பணியில் ஈடுபட இருக்கும் காவலா்களுக்கு முகக்கவசம், கை கிருமிநாசினி போன்ற கரோனா நோய்த் தடுப்புகளை வழங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்களின் பொதுநலனை கருதி மக்கள் ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள சமூக விலகல் முக்கியமானது. வெளிநாடுகளில் இருந்து கா்நாடகத்துக்கு வந்தவா்களின் கைகளில் முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT