கா்நாடகத்தில் முதலாம் ஆண்டு பட்டப் படிப்பு படிக்கும் 96,483 மாணவா்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று துணைமுதல்வா் சி.என்.அஸ்வத்நாராயணா தெரிவித்தாா்.
கா்நாடக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பாஜக உறுப்பினா் மகந்தேஷ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து அவா் பேசியது:
முதலாமாண்டு பட்டப் படிப்பு படிக்கும், ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் கொண்ட மாணவா்களுக்கு மட்டுமே இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முந்தைய அரசுகள் செயல்படுத்தி வந்தன. அதனை பின்பற்றி, பாஜக அரசும் செயல்படுத்தும். மாணவா்கள் மடிக்கணினி வாங்குவது, அதற்கான கட்டணத்தொகையை வழங்குவது உள்ளிட்டவைகளை முந்தைய அரசுகளின் செயல்பாடுகளை பின்பற்றி செயல்படுவோம்.
இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் எந்த திட்டமும் அரசிடமில்லை. முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் 96,483 போ் பயனடைய உள்ளனா். பின்னா், பட்டியலினத்தைச் சோ்ந்த 1.09 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும். இதற்காக ரூ. 311 கோடி செலவிடப்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது என்றாா்.