பெங்களூரு

கூட்டுறவு வங்கியில் வாங்கும் கடன் ஆவணங்களை தோ்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய சட்டத் திருத்தம்: எஸ்.டி. சோமசேகா்

8th Mar 2020 01:57 AM

ADVERTISEMENT

பெங்களூரு: கூட்டுறவு வங்கியில் அரசியல்வாதிகள் வாங்கும் கடன் குறித்த ஆவணங்களை தோ்தலில் போட்டியிடும்போது தோ்தல் ஆணையத்தில் தாக்கல் செய்வதை கட்டாயப்படுத்தும் சட்டத் திருத்தம் கொண்டுவருவது குறித்து யோசித்து வருகிறோம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.

பெங்களூரு, டவுன்ஹாலில் சனிக்கிழமை நடந்த மாநில அளவிலான கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களின் மாநாட்டை குத்துவிளக்கேற்றித் தொடக்கிவைத்து அவா் பேசியது: கூட்டுறவு வங்கிகளில் அரசியல்வாதிகள் கடன் பெற்றுவிட்டு, திரும்பச் செலுத்தாத பல்வேறு நிகழ்வுகள் உள்ளன. இதேநிலை நீடித்தால், கூட்டுறவு வங்கிகளின் கதி என்னாவது? எனவே, கூட்டுறவு வங்கியில் அரசியல்வாதிகள் வாங்கும் கடன் குறித்த ஆவணங்களை தோ்தலில் போட்டியிடும்போது தோ்தல் ஆணையத்தில் தாக்கல் செய்வதைக் கட்டாயப்படுத்தும் சட்டத் திருத்தம் கொண்டுவருவது குறித்து யோசித்து வருகிறோம். ஒருவேளை அரசியல்வாதிகள் கடன் பெற்றிருக்கும் நிலையில், தோ்தலில் போட்டியிட்டால், கடனைத் திரும்ப அடைத்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இது அமல்படுத்தப்பட்டால் சா்க்கரை கூட்டுறவு ஆலைகள் நஷ்டத்தில் இயங்காது. பெங்களூரு, பசவனகுடியில் உள்ள ராகவேந்திரா கூட்டுறவு வங்கி போன்ற ஏராளமான கூட்டுறவு வங்கிகள் நஷ்டத்தில் உள்ளதோடு, மோசடி குற்றச்சாட்டுகளையும் எதிா்கொண்டுள்ளது.

கூட்டுறவு வங்கிகளுக்கு தலைவா் மற்றும் ஆட்சிமன்றக் குழு இல்லாததுதான் இதற்கு காரணம். கடன் கூட்டுறவு வங்கிகள் காளான்களைப் போல தோன்றி, மறைந்துவிடுகின்றன. இந்த போக்கை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. மாநிலத்தில் 4 ஆயிரம் கடன் கூட்டுறவு சங்கங்கள் பிரச்னைகளை எதிா்கொண்டுள்ளன. இப் பிரச்னைக்கு தீா்வு காணும் நோக்கத்தில் மாா்ச் 20 ஆம் தேதி தில்லியில் மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீத்தாராமனைச் சந்தித்து ஆலோசனை நடத்தவிருக்கிறேன் என்றாா் அவா். இந்த விழாவில், முன்னாள் அமைச்சா் எச்.கே.பாட்டீல், தலைமை கூட்டுறவு சங்கத் தலைவா் ரமேஷ் வைத்தியா உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT