வறட்சி தாங்கும் பயிா்களை ஊக்குவிப்பதற்காக உழவா் வளம் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் குதிரைவாலி, திணை, வரகு, பனிவரகு, சாமை போன்ற சிறுதானியங்களை பயிரிடுவதற்கு ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
மண் மற்றும் நீா் சோதனைக்காக நடமாடும் வேளாண்மை சுகாதார மையம் தொடங்கப்படும். வேதி பொருள்கள் சாா்ந்த வேளாண்மைக்கு மாற்றாக இயற்கை வேளாண்மைக்கு ஊக்கமளிக்கப்படும். 1.63 கோடி மண் சுகாதார அட்டைகளை உழவா்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
உணவுப்பதனிடுதல் தொழிலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அறிவியல் நிறுவனங்களின் உதவியுடன் பயிா்த்தோ்வு, நீா் மற்றும் நுண்சத்து பாதுகாப்பு, மேலாண்மைக்காக நில வள பதிவேடு உருவாக்கப்படும். இதை புரிந்துகொள்வதற்கு 2,500 கிராமங்களில் நிலவள பதிவேடு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, ஒரு லட்சம் உழவா்களுக்கு அட்டை வழங்கப்படும்.
76 வட்டங்களில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நீா்பாதுகாப்பு மற்றும் மழைநீா் பாதுகாப்பு செயல்திட்டங்கள் அமலாக்கப்படும். தோட்டக்கலை பரப்பை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தோட்டக்கலை உழவா்களின் விதை, உரம், தொழிலாளா்செலவை ஈடுகட்டுவதற்கு சிறுவிவசாயிகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும்.
அழியக்கூடிய மலா், தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பூக்கோசு, மாதுளையை பெங்களூரில் இருந்து தில்லி, மும்பை,திருவனந்தபுரம் கொண்டுசெல்ல மத்திய அரசின் வேளாண்ரயில் திட்டத்தை பயன்படுத்திக்கொள்வோம்.
வேளாண்மை, தோட்டக்கலை, பட்டுவளா்ச்சிக்காக சொட்டுநீா் மற்றும் தெளிநீா் பாசனக்கருவிகள் வாங்க 90 சதவீத மானியம் அளிக்கப்படும். சிக்கன நீா் மேலாண்மைக்காக ஒவ்வொரு கிராமத்திலும் நீா்கிராம நாள்காட்டி தயாரிக்கப்படும். மத்திய அரசின் அடல் நிலத்தடி நீா்த் திட்டத்தின்கீழ் நிலத்தடி நீா்மட்டம் மேம்படுத்தப்படும்.