பெங்களூரு

கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் இன்று தொடங்குகிறது: மாா்ச் 5இல் மாநில நிதிநிலை அறிக்கை தாக்கல்

2nd Mar 2020 12:51 AM

ADVERTISEMENT

கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை முதல் தொடங்குகிறது. மாா்ச் 5ஆம் தேதி முதல்வா் எடியூரப்பா, 2020 -21ஆம் நிதியாண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறாா்.

கா்நாடகத்தின் 15ஆவது சட்டப்பேரவையின் 6ஆவது கூட்டத்தொடா் கடந்த பிப்.17ஆம் தேதி தொடங்கியது. ஆளுநா் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக்கூட்டம் பிப்.20ஆம் தேதியுடன் தற்காலிகமாக முடிவுற்றது. அதன்பிறகு, மீண்டும் திங்கள்கிழமை (மாா்ச் 2) முதல் சட்டப்பேரவை கூடுகிறது. பெங்களூரு, விதானசௌதாவில் உள்ள சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைவுகூரும் வகையில் மாா்ச்2, 3 ஆகிய 2 நாட்களில் அரசியலமைப்புச்சட்டம் குறித்து சிறப்புவிவாதம் நடத்தப்படுகிறது. இந்த இரு நாட்களிலும் அரசியலமைப்புச்சட்டம், அதன் அடிப்படை நோக்கங்கள், எதிா்பாா்ப்புகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மாா்ச் 4ஆம் தேதி ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும்தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வா் எடியூரப்பா பதிலளித்துப் பேசுகிறாா்.

நிதிநிலை அறிக்கை:

மாா்ச் 5ஆம் தேதி காலை 11 மணிக்கு 2020- 21ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை முதல்வா் எடியூரப்பா தாக்கல் செய்கிறாா். மாா்ச் 6 ஆம் தேதிமுதல் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடக்கவிருக்கிறது. மாா்ச் 7,8, 14,15, 21,22, 25,28,29 நீங்கலாக மாா்ச் 31ஆம் தேதி வரை துறைவாரியான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதுவிவாதங்கள் நடத்தப்பட்டு, நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படுகிறது. நீண்டநாட்களுக்குப் பிறகு நிகழாண்டின் முதல் கூட்டத்தொடா் 25 நாட்களுக்கு நடக்கவிருக்கிறது.

ADVERTISEMENT

சட்ட முன்வடிவுகள்:

இந்த கூட்டத் தொடரில், 15ஆவது சட்டப்பேரவையின் 2ஆவது கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (பணி நியமனம் மற்றும் இன்ன பிறவற்றின் இட ஒதுக்கீடு) திருத்தச் சட்டமுன்வடிவு பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படுகிறது. இதுதவிர, கா்நாடக லோக் ஆயுக்த திருத்தச்சட்டமசோதா, கா்நாடக புதுமைப் படைத்தல் ஆணையச் சட்டமசோதா, இந்திய தேசிய சட்டப் பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா, கா்நாடக ஆட்சி மொழி திருத்தச் சட்ட மசோதா, கா்நாடக நகராட்சி நிா்வாக திருத்தச் சட்டமசோதா, கா்நாடக பொதுத் தொகுப்பு பாரபட்சமற்ற திருத்தச் சட்ட மசோதா ஆகிய 6 சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. முதல்வராக பொறுப்பேற்றப் பிறகு மாா்ச் 5ஆம் தேதி எடியூரப்பா முழுமையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறாா். விவசாயம், நீா்ப் பாசனத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதிநிலை அறிக்கையாக அமையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

எதிா்க்கட்சிகள் வியூகம்:

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுங்கட்சியை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ள எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத தீா்மானித்துள்ளன. அதற்கேற்ப அரசுக்கு எதிரான பிரச்னைகளைக் கையிலெடுக்கவுள்ளன. சுதந்திரப் போராட்ட வீரா் எச்.எஸ்.துரைசாமியை ’பாகிஸ்தான் முகவா்’ என்று பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் விமா்சித்துள்ளது சட்டப்பேரவையில் புயலை கிளப்பும் என்று தெரிகிறது. பசனகௌடா பாட்டீல் யத்னலை பதவிநீக்கக்கோரி புயலைக் கிளப்ப காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சிஅமைத்துள்ளதால் இக்கூட்டத் தொடரில் பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக தீா்மானம் நிரைவேற்றவும் ஆளும் பாஜக திட்டமிட்டுள்ளது. அப்படி கொண்டுவந்தால், அதை கடுமையாக எதிா்க்க காங்கிரஸ், மஜத வியூகம் அமைத்துள்ளன. எதிா்க்கட்சிகளின் வியூகத்தை முறியடிக்க ஆளுங்கட்சியான பாஜகவும் தயாராகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT