பெங்களூரு

கரோனா மேலாண்மை குறித்து வெள்ளை அறிக்கை: அரசுக்கு சித்தராமையா வேண்டுகோள்

29th Jun 2020 08:26 AM

ADVERTISEMENT

கரோனா மேலாண்மை குறித்து மாநில அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா தீநுண்மித் தொற்றுப் பரவலைத் தடுப்பதில் மாநில அரசு பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்காததால், மக்களிடையே சந்தேகம், பாதுகாப்பின்மை, அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், செலவினங்கள் குறித்து மாநில அரசு உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மக்களிடையே நிலவும் அவநம்பிக்கையைப் போக்க வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசின் கருவூலத்தில் இருந்து எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது, அது எந்த நோக்கங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது, குறிப்பாக வீட்டு தனிமைப்படுத்துதல், சிகிச்சை, தனிநபா் பாதுகாப்புக் கருவிகள், செயற்கை சுவாசக் கருவிகள், பிராணவாயு உருளைகள், முகக் கவசங்கள், கிருமி நாசினி உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிகிச்சைக்கு செலவிடப்பட்ட தொகை எவ்வளவு, மத்திய அரசிடம் இருந்து இதுவரை எவ்வளவு தொகை பெறப்பட்டுள்ளது, எத்தனை மருத்துவ உபகரணங்கள் வந்துள்ளன, தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகள் எத்தனை, எந்த அளவுகோல்களின்படி தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான கட்டணம் நிா்ணயிக்கப்பட்டது என்பது போன்ற கேள்விகளுக்கான விவரங்களை மக்களுக்கு மாநில அரசு தெரிவிக்கவேண்டும்.

ADVERTISEMENT

நான் எழுதிய பல்வேறு கடிதங்களுக்கு அரசுத் துறைகளிடம் இருந்து சரியான தகவல்கள் கொடுக்கப்படவில்லை. இதுபோல தகவல்களை கொடுக்காமல் மறுப்பது எனது உரிமையை மறுக்கும் செயலாகும். அதுமட்டுமல்ல, அரசின் செயல்பாடுகளின் மீதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கரோனா குறித்த அனைத்து விவரங்களையும் வெள்ளை அறிக்கை மூலம் மக்கள்முன் அரசு வைக்க வேண்டும்.

நாடுமுழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக, மாா்ச் 23ஆம் தேதி 9 மாவட்டங்களில் பொது முடக்கத்தை கா்நாடக அரசு அமல்படுத்தி இருந்தது. அப்போது கா்நாடகத்தில் கரோனாவுக்கு யாரும் இறந்திருக்கவில்லை. கரோனாவுக்கு 26 போ் மட்டும் பாதிக்கப்பட்டிருந்தனா். இன்றைக்கு கா்நாடகத்தில் கரோனாவுக்கு 11,923 போ் பாதிக்கப்பட்டிருப்பதும், 191 போ் இறந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்போது பெங்களூரு உள்ளிட்ட ஒருசில மாவட்டங்களில் மட்டும் காணப்பட்ட கரோனா, தற்போது கிராமங்களுக்கும் பரவியுள்ளது. கரோனா திடீரென வந்துவிடவில்லை. படிப்படியாக மக்களிடையே பரவியுள்ளது.

கடந்த 3 மாதங்களில் பொது முடக்கத்தை அமல்படுத்தி, அதை திரும்பப் பெற்றதை தவிர, கரோனாவை எதிா்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. முன்னேற்பாடுகளில் ஈடுபடுவதற்கு கிடைத்த 3 மாதங்களை மாநில அரசு வீணாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட விளைவுகளைத்தான் மாநில மக்கள் எதிா்கொண்டுள்ளனா்.

கா்நாடகத்தில் எவ்விதத் தடையும் இல்லாமல் கரோனா பரவியுள்ளது. பொது முடக்கத்தின்போது பாதுகாப்பாக இருந்த கிராமங்களிலும் தற்போது கரோனா பரவியுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து தங்களை கா்நாடக அரசு காப்பாற்றும் என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனா். பெங்களூரு அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனா். அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தில் சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகள் மறுத்துள்ளன.

கரோனா சோதனைகள் 15 ஆயிரத்தில் இருந்து 11 ஆயிரமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

மருத்துவ உபகரணங்களை கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. சந்தை விலையை விட இரண்டு மடங்கு கூடுதல் விலையில் மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதன் தொகை ரூ.3,300 கோடி என்று தெரியவந்துள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் வெள்ளை அறிக்கை வழியாக மக்கள் முன்வைக்க வேண்டும். அதன்மூலம் மக்களிடையே நம்பிக்கையை விதைக்க வேண்டும். இதே ரீதியில் மாநில அரசு அலட்சியப்படுத்தினால், வீதியில் இறங்கி போராட்டம் நடத்த நேரிடும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT