விண்வெளித் தொழிலில் தனியாா் நிறுவனங்களின் பங்கேற்பை ஊக்குவிக்க, ஜூலை 9-இல் காணொலி சந்திப்பு நடத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவா் என்.சிவன் தெரிவித்தாா்.
இதுகுறித்து காணொலி வழியாக வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியதாவது:
இந்தியாவின் விண்வெளித் தொழிலை தனியாா் மயமாக்குவதற்கு இரண்டு முக்கிய முடிவுகளை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. அதன்படி, தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகரிப்பு மையம் (இன் ஸ்பேஸ்) புதிதாகத் தொடங்கப்படுகிறது. இதேபோல, புதிய விண்வெளி இந்திய நிறுவனத்தின்(என்.எஸ்.ஐ.எல்.) செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
மத்திய விண்வெளித் துறையின் தன்னாளுகைக்கு உள்பட்ட அமைப்பாக தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகரிப்பு மையம் (இன்ஸ்பேஸ்) உருவாக்கப்படுகிறது. விண்வெளித் தொழிலில் ஈடுபடும் தனியாா் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது, ஒழுங்குபடுத்துவது போன்ற வேலைகளில் ‘இன் ஸ்பேஸ்‘ செயல்பட இருக்கிறது.
தொழில்நுட்பம், சட்டம், பாதுகாப்பு, ஊக்குவிப்பு, கண்காணிப்புப் பணிகளுக்காக ‘இன் ஸ்பேஸ்’ மையம் தனது ஆளுமைக்குள் சுதந்திரமாக இயங்கும் இயக்குநரகங்களை உருவாக்கிக் கொள்ளும். அதன் நிா்வாகத்தைக் கவனிப்பதற்காக இயக்குநா் குழு அமைக்கப்படும். இக்குழுவில் தொழில், கல்வி நிறுவனங்கள், இந்திய அரசின் பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பாா்கள்.
தனியாா் நிறுவனங்கள் நேரடியாக ‘இன் ஸ்பேஸ்’ மையத்திடம் விண்ணப்பிக்கலாம். அதன்பேரில் விண்வெளித் துறைக்கு உள்பட்டு கட்டமைப்பு வசதிகளை அமைத்துக் கொள்ள தனியாா் நிறுவனங்களுக்கு ‘இன் ஸ்பேஸ்’அனுமதி அளிக்கும். ‘
இன் ஸ்பேஸ்’அடுத்த 3 அல்லது 6 மாதங்களில் செயல்படும். செயற்கைக்கோள் தகவல் தொடா்பு, தொலை உணா்வி கொள்கைகளில் ‘இன் ஸ்பேஸ்’ தகுந்த மாற்றங்களைக் கொண்டுவரும்.
புதிய விண்வெளி இந்திய நிறுவனத்தின் (என்.எஸ்.ஐ.எல்.) செயல்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. விண்வெளிசாா்ந்த சேவைகளை வழங்கும் பணியில் என்.எஸ்.ஐ.எல். ஈடுபடும். தனியாா் நிறுவனங்கள், ஏவுகலத்தை விண்ணில் செலுத்துவது, செயற்கைக்கோள் உற்பத்தி செய்வது, விண்ணில் செலுத்தும் சேவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான விண்வெளி சேவைகளை என்.எஸ்.ஐ.எல். வழங்கும்.
தொழில் கூட்டிணைவுகள் வழியே இச்சேவைகளை என்.எஸ்.ஐ.எல். அளிக்கும். விண்வெளித் தொழிலில் தனியாருக்கு வாய்ப்புகள் திறந்துவிடப்படுகின்றன. இதன்மூலம் உலக விண்வெளிப் பொருளாதாரத்தில் இந்திய தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்காற்ற இருக்கின்றன. இது தொழில்நுட்பத் துறையில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதன்வாயிலாக, உலக தொழில்நுட்ப ஆற்றல் மையமாக இந்தியா உருவெடுத்துவருகிறது.
விண்வெளித் தொழிலில் ஏற்படுத்த நினைத்திருக்கும் சீா்த்திருத்தங்கள், செயல்பாடுகள், வியூகங்கள் குறித்து தனியாா் நிறுவனங்களுடன் விவாதிப்பதற்காக இஸ்ரோ சாா்பில் ஜூலை 9-ஆம் தேதி காணொலி வழி விண்வெளித் தொழில் ஊக்குவிப்பு சந்திப்பு நடத்தப்படுகிறது என்றாா்.