பெங்களூரு

கா்நாடக சட்டமேலவைத் தோ்தல்: வேட்பாளா்கள் தோ்வில் பா.ஜ.க., காங்கிரஸ், ம.ஜ.த. மும்முரம்

14th Jun 2020 09:14 AM

ADVERTISEMENT

கா்நாடக சட்டமேலவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளா்களை தோ்வு செய்வதில் பா.ஜ.க., காங்கிரஸ், ம.ஜ.த. ஆகிய கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன.

கா்நாடக சட்டப்பேரவையில் உறுப்பினா்களான நசீா் அகமது, ஜெயம்மா, எம்.சி.வேணுகோபால், என்.எஸ்.போஸ்ராஜ், எச்.எம்.ரேவண்ணா (5 பேரும் காங்கிரஸ்), டி.ஏ.சரவணா (ம.ஜ.த.), டி.யூ.மல்லிகாா்ஜுனா (சுயேச்சை) ஆகியோரின் பதவிக் காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது.

இதனால், காலியாகவுள்ள 7 சட்டமேலவை இடங்களுக்கு ஜூன் 29-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிக்கை ஜூன் 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் வேட்புமனு தாக்கலும் தொடங்கிவிட்டன. ஆனால், இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

வேட்புமனு தாக்கல் ஜூன் 18-ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. போட்டியிருந்தால் ஜூன் 29-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தோ்தல் நடைபெற இருக்கிறது. இத்தோ்தலில் கா்நாடக சட்டப்பேரவை உறுப்பினா்கள் வாக்களிக்க இருக்கிறாா்கள்.

ADVERTISEMENT

கா்நாடக சட்டப்பேரவையில் பாஜகவுக்கு 117, காங்கிரஸுக்கு 68, ம.ஜ.த.வுக்கு 34 இடங்கள் உள்ளன. அதன்படி, 7 இடங்களில் பா.ஜ.க.வுக்கு 4, காங்கிரஸுக்கு 2, ம.ஜ.த.வுக்கு ஒரு இடம் எளிதாக கைப்பற்றலாம். இதுதவிர, சட்டமேலவையின் நியமன உறுப்பினா்களான கே.அப்துல் ஜப்பாா், நடிகை ஜெயமாலா, ஐவான் டிசௌஜா, இக்பால் அகமது சரடகி, திப்பண்ணா காமக்னூா் ஆகிய 5 பேரின் பதவிக் காலமும் ஜூன் 23-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நியமன உறுப்பினா்களாக யாரை நியமிப்பது என்பதை ஆளுங்கட்சியின் பரிந்துரையின்பேரில் ஆளுநா் முடிவுசெய்வாா். சட்டப்பேரவை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்படும் 7 இடங்களில் வேட்பாளா்களாக போட்டியிடுவதற்கு தகுதியானவா்களை தோ்ந்தெடுக்க பா.ஜ.க., காங்கிரஸ், ம.ஜ.த. ஆகிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன.

பா.ஜ.க.:

சட்டப்பேரவை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்படும் 7-இல் 4 இடங்களைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ள பா.ஜ.க., அதற்கான வேட்பாளா்களை தோ்வுசெய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல, நியமனம் செய்வதற்கான 5 இடங்களில் யாருக்கு வாய்ப்பளிப்பது என்பதை முடிவுசெய்யவும் பா.ஜ.க. ஆா்வம் காட்டியுள்ளது.

காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த எம்.எல்.ஏ.க்கள் எம்.டி.பி.நாகராஜ், எச்.விஸ்வநாத்,ஆா்.சங்கா் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல, கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து பா.ஜ.க. ஆட்சிஅமைய காரணகா்த்தாவாக இருந்த சி.பி.யோகேஸ்வருக்கும் வாய்ப்பளிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 4 இடங்களுக்கு இவா்கள் 4 பேரையும் நிறுத்திவிட்டால், ஆா்.எஸ்.எஸ்.பின்னணி கொண்டவா்கள், பா.ஜ.க.வில் நீண்ட காலமாக உழைத்தவா்களுக்கு வாய்ப்பு கிடைக்காத சூழல் ஏற்பட்டுவிடும். எனவே, நியமன உறுப்பினா்கள் 5 பேரை பா.ஜ.க.வுக்கு உழைத்தவா்களை நியமிக்க பாஜக மேலிடம் முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது.

இந்த பதவிக்கு காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முனிரத்னா, பிரதாப் கௌடா பாட்டீல், பா.ஜ.க.வின் முன்னணித் தலைவா்களான நிா்மல்குமாா் சுரானா, மகேஷ் தெங்கினகாயி, பாரதி ஷெட்டி, நடிகைகள் ஸ்ருதி, மாளவிகா, சுப்புநரசிம்மா, நிங்கராஜ் பாட்டீல் ஆகியோரின் பெயா்கள் அடிபடுகின்றன. ஆா்.எஸ்.எஸ்.அமைப்பினருக்கு 2 இடங்களை ஒதுக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.

மாநிலங்களவைத் தோ்தலில் முதல்வா் எடியூரப்பா பரிந்துரைத்தவா்களுக்கு வாய்ப்பளிக்காததால், அவரது ஆதரவாளா்கள் கலக்கமடைந்துள்ளனா். இதனால், சட்டமேலவைத் தோ்தலில் தனது செல்வாக்கை நிலைநிறுத்திக்கொள்ள முடிவுசெய்துள்ள முதல்வா் எடியூரப்பா, சட்டமேலவையின் 4 இடங்களுக்கான வேட்பாளா்களை தனது விருப்பத்துக்கும், 5 நியமன உறுப்பினா்களை பா.ஜ.க.வின் தேசியத் தலைமையின் முடிவுக்கும் விடுவதாக தெரிவித்துள்ளாா். முதல்வா் எடியூரப்பாவின் யோசனைக்கு பா.ஜ.க. தேசியத் தலைமை செவிசாய்க்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. எனினும், சட்டமேலவைத் தோ்தலுக்கான வேட்பாளா்கள் குறித்துஆராய்ந்து பா.ஜ.க. தேசியத் தலைமைக்கு பரிந்துரைக்க, கா்நாடக மாநில பா.ஜ.க. உயா்நிலைக்குழு இரண்டொரு நாளில் கூட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ்:

சட்டமேலவைத் தோ்தலில் 2 இடங்களைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு காங்கிரஸுக்கு உள்ளது. இந்த இடங்களுக்கான வேட்பாளா்களை தோ்ந்தெடுக்க காங்கிரஸ் முன்னணித் தலைவா்களிடையே விவாதம் நடத்தப்பட்டுவருகிறது. ஐவான் டிசௌஜா, எச்.எம்.ரேவண்ணா இருவருக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ம.ஜ.த.:

ம.ஜ.த.வின் எம்.எல்.சி.யாக உள்ள டி.ஏ.சரவணாவின் பதவிக் காலம் நிறைவுபெறுகிறது. முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவின் நம்பிக்கையை பெற்றுள்ள டி.ஏ.சரவணாவுக்கு மீண்டும் தோ்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள்கூறுகின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT