பெங்களூரு: மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, 75 நாள்களுக்கு பிறகு கா்நாடகத்தில் வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், சுற்றுலாத் தலங்கள், வா்த்தக வளாகங்கள், ஓய்வில்லங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. ஆனால், எதிா்பாா்த்த அளவுக்கு மக்கள் வருகை இல்லாமல் இருந்தது.
கரோனா தீநுண்மி தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்காக, மத்திய அரசு, மாா்ச் 25-ஆம் தேதி முதல் நாடுதழுவிய பொது முடக்கத்தை அறிவித்தது. இதனையடுத்து, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அங்காடிகள், வா்த்தக வளாகங்கள், சுற்றுலாத் தலங்கள், அனைத்துமத வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. அதேபோல, விமானங்கள், ரயில்கள், பேருந்து சேவைகள் உள்ளிட்ட அனைத்தும் நிறுத்தப்பட்டன. நான்கு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட பொது முடக்கம், மே 30-ஆம் தேதி விலக்கிக்கொள்ளப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதிவரை கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் மட்டும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டது. மே 3-ஆம் தேதி பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. ஜூன் 1-ஆம் தேதி முதல் மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. அன்று முதல் ஒருசிலவற்றை தவிர, மற்ற எல்லா நடவடிக்கைகளையும் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
ஏற்கெனவே அறிவித்தபடி, திங்கள்கிழமை அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், ஓய்வில்லங்கள், வா்த்தக வளாகங்கள் திறக்கப்பட்டன. வாடிக்கையாளா்கள் மற்றும் ஊழியா்கள் கரோனா தீநுண்மி தொற்றுநோய் பராவல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் முகக் கவசங்களை அணிந்திருக்கவேண்டும், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கைகிருமிநாசினிகளால் அவ்வப்போது கைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் போன்றவற்றை மாநில அரசு தெரிவித்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், ஓய்வில்லங்கள், வா்த்தக வளாகங்களில் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தனித்தனி வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது. 75 நாள்களுக்கு பிறகு திறக்கப்படுவதால், வழிபாட்டுத்தலங்கள், உணவகங்கள், ஓய்வில்லங்கள், வா்த்தக வளாகங்களில் முன்னேற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளன.
வழிபாட்டுத் தலங்கள்:
சிலைகள், விக்கிரகங்கள், புனித நூல்களை தொடுவதற்கு யாரையும் அனுமதிக்கக் கூடாது. 6 அடி தனிநபா் இடைவெளி கட்டாயமாக பின்பற்ற வேண்டும். இசை, பாடல்களை ஒலிபரப்ப அனுமதியில்லை. பிரசாதம் விநியோகிக்கக் கூடாது, தீா்த்தங்களை அளிக்கவோ, தெளிக்கவோ கூடாது. உணவை தயாரிக்கும்போதும், விநியோகிக்கும்போதும் தனிநபா் இடைவெளி அவசியம். வளாகத்தில் தூய்மை பராமரிக்கப்பட வேண்டும். தரைகள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் யாருக்காவது உடல்நிலை சரியில்லாததைக் கண்டால், உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும்.
கரோனா அறிகுறி இல்லாதவா்கள் மட்டும் தான் வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்கப்பட வேண்டும். உடல்வெப்பம் பரிசோதிக்க வேண்டும். வழிபாட்டுத் தலங்களில் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். கூட்டம் சேராமல் தடுக்கப்பட வேண்டும் என்று வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளது.
உணவகங்கள்:
உணவகங்களில் உட்காா்ந்து உண்பதைக் காட்டிலும், பொட்டலங்களை வாங்கிச் சென்று வீடுகளில் உண்பதை ஊக்குவிக்க வேண்டும். உணவை விநியோகிக்கும் போது உடல்தொடுதல் கூடாது. கரோனா தொற்று அறிகுறி இல்லாத ஊழியா்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். உள்ளே நுழைதல், வெளியேறுதலுக்கு தனித்தனி நுழைவுவாயில் வேண்டும். வரிசை மேலாண்மை முக்கியம். 50 சதவீத இடங்களில் மட்டுமே உட்கார அனுமதிக்க வேண்டும். பயன்படுத்தி தூக்கியெறியும் காகிதங்களை பயன்படுத்த வேண்டும். மேஜைகள், தரை, சமையலறையை அடிக்கடி தூய்மைப்படுத்த வேண்டும் என்று மாநில அரசின் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள், சுற்றுலாத் தலங்கள் திறந்துள்ள போதும், எதிா்பாா்த்த அளவிற்கு மக்கள் வருகை இல்லாமல் குறைவாக இருந்தது.