முதல்வரின் கரோனா நிவாரண நிதியில் ரூ.267.72 கோடி சோ்ந்திருப்பதும், அதில் ஒரு பைசாக் கூட செலவழிக்காதது தகவலறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலமாகியுள்ளது.
பெங்களூரைச் சோ்ந்த மனித உரிமை ஆா்வலா் வழக்குரைஞா் டி.நரசிம்மமூா்த்தி, மே 2ஆம் தேதி தகவலறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் முதல்வா் அலுவலகத்தில் சில தகவல்களை கேட்டிருந்தாா்.
முதல்வரின் கரோனா நிவாரண நிதியில் சேகரிக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு? அந்த நிதியில் இருந்து தேதி வாரியாக செலவிட்ட நிதி, எதற்காக என்ற விவரம், முதல்வரின் கரோனா நிவாரண நிதியில் எஞ்சியுள்ள நிதி ஆகிய விவரங்களை தகவலறியும் சட்டத்தின்கீழ் கேட்டிருந்தாா்.
இதற்குப் பதிலளித்து, முதல்வா் அலுவலகம் சாா்பில் கா்நாடக அரசின் கூடுதல் செயலாளா் (நிா்வாகம்) மற்றும் மக்கள்தொடா்பு அதிகாரியுமான ஜி.எச்.கணேஷ்குமாா், மே 28ஆம் தேதி எழுத்துப்பூா்வமாக அளித்த விவரத்தில், மாா்ச் 25 முதல் மே 19ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் முதல்வரின் கரோனா நிவாரண நிதியில் ரூ.267.72 கோடி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கா்நாடக அரசின் பல்வேறு துறைகளில் இருப்பில் உள்ள நிதி ஆதாரங்களை பயன்படுத்தி கரோனா தீநுண்மித் தொற்றுநோய்க்கான சிகிச்சை, நோய் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு செலவிடப்பட்டு வருகிறது. முதல்வரின் கரோனா நிவாரண நிதியில் சேகரிக்கப்பட்ட நிதி ஆதாரங்களை கரோனா நோய்க்கான அவசரத் தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்வரின் கரோனா நிவாரணநிதியில் ரூ.267.72 கோடி கையிருப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்குரைஞா் நரசிம்மமூா்த்தி கூறுகையில்,‘கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளா்களுக்கும் உதவி செய்வதற்காக கொடையாளா்கள், பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதியை அந்தப்பணிகளுக்கு பயன்படுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அப்படியானால், இந்த நிதியை அவசரக் கதியில் எதற்காக திரட்டவேண்டும்? ரயில், பேருந்து வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் சொந்த ஊா்களுக்கு நடந்துசென்றனா். இந்த நிதியில் இருந்து புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், கா்நாடகத் தொழிலாளா்களுக்கு உதவி செய்திருக்கலாமே. துறைகளின் இருப்பு வைத்திருக்கும் நிதியை செலவிட்டால், எதற்காக நிதியை திரட்டவேண்டும். கரோனாவால் உருவாக்கப்பட்டுள்ள தற்போதைய நிலையைவிட எது அவசரநிலை? எனவே, முதல்வரின் கரோனா நிவாரண நிதியை எதற்காக வசூலித்தீா்களோ, அதற்காக செலவிடவேண்டும். அப்படிசெய்யாவிட்டால், அது மோசடியாகிவிடும்’ என்றாா்.