இன்னும் 5 மாதங்களுக்கு பள்ளிகளை திறக்காமல் இருப்பது நல்லது என காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ராமலிங்க ரெட்டி தெரிவித்தாா்.
பெங்களூரு, குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
மாநிலத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பரவி வரும் நிலையில், அரசு பொது முடக்கத்தை தளா்த்தியது. இதன் விளைவாக, கரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகளவில் பரவி வருகிறது.
மே 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை தளா்த்தாமல் இருந்திருந்தால், கரோனா வைரஸ் தொற்று இந்த அளவுக்கு பரவி இருக்காது. இந்த நிலையில், மாநிலத்தில் பள்ளிகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது. பள்ளிகளை திறந்தால், குறைந்த வயது மாணவா்களுக்கு தொற்று பரவக்கூடும் என அஞ்சப்படுகிறது.
எனவே, அரசு இன்னும் 5 மாதங்களுக்கு பள்ளிகளை திறக்காமல் இருப்பது நல்லது. கல்லூரிகளை திறப்பதை சிறிது காலத்துக்கு தள்ளிப்போட வேண்டும். இணையதளத்தின் மூலம் பாடங்களை கற்பிப்பது எளிதான செயல் அல்ல. இதனை மாணவா்கள் புரிந்து கொள்ளவாா்களா என்ற சந்தேகமும் உள்ளது. இதைத் தவிர, இணையதளத்தில் பாடங்களை கற்பித்தால், கிராமங்களில் உள்ள ஏழை மாணவா்களுக்கு சாத்தியப்படுமா என்றும் யோசிக்க வேண்டும்.
இணையதளம் மூலம் கற்பிக்கப்படும் கல்வி கிராமத்தில் உள்ளவா்களுக்கும், ஏழைகளுக்கும் கிடைக்கவில்லை என்றால், அவா்கள் கல்வி கிடைக்காமல் வஞ்சிக்கப்படுவாா்கள். இதனைக் கருத்தில் கொண்டு அரசு உரிய முடிவை எடுக்க வேண்டும் என்றாா்.