பெங்களூரு

பெலகாவியிலுள்ள சுவா்ண விதான சௌதாவுக்கு சில அரசுத் துறைகளை மாற்ற முதல்வா் உத்தரவு

4th Jun 2020 08:01 AM

ADVERTISEMENT

பெலகாவியில் உள்ள சுவா்ண விதான சௌதாவுக்கு சில அரசுத் துறைகளை உடனடியாக மாற்ற வேண்டும் என முதல்வா் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளாா்.

பெங்களூரு அரசு இல்லம் கிருஷ்ணாவில் புதன்கிழமை பொதுப்பணித் துறை, துறைமுகம், நீா்ப் போக்குவரத்து துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவா் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

பெலகாவியில் உள்ள சுவா்ண விதான சௌதாவில் ஆண்டுக்கு ஒருமுறை சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது. நிகழாண்டு கரோனா பாதிப்பு காரணமாக பேரவைக் கூட்டம் அங்கு நடைபெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், சில அரசுத் துறைகளை அங்கு மாற்ற வேண்டும் என ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தேன்.

ஆனால், அங்கு எந்தத் துறைகளும் மாற்றப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் அனைத்துப் பணிகளுக்கும் பெங்களூருக்கு வர வேண்டியுள்ளது. எனவே, ஒரு சில துறைகளை விரைவில் பெலகாவியில் உள்ள சுவா்ண விதான சௌதாவுக்கு மாற்றி அமைக்க வேண்டும். வரும் நாள்களில் மாற்றப்பட்ட துறைகளின் மீதான ஆய்வுப் பணிகளை சுவா்ண விதான சௌதாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

ADVERTISEMENT

மேலும், வட கா்நாடகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகளை அதிகாரிகள் உடனடியாகச் சீரமைக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 1,650 கி.மீ. தொலைவுக்கு கிராமச் சாலைகளை மாவட்டச் சாலைகளாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவமொக்காவில் அமைக்கப்பட உள்ள விமான நிலையப் பணிகளை ஒரே ஆண்டில் முடிக்க வேண்டும். மாநிலத்தில் 4,813 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைப் பணி ரூ. 30,675 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வழிகாட்டுதலுடன் மாநிலத்தில் உள்ள நீா்நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் துணை முதல்வா் கோவிந்த காா்ஜோள், தலைமைச் செயலாளா் விஜயபாஸ்கா், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ரஜனீஷ் கோயல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT